தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

“அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றவர் – திருவள்ளுவர்

வானியல் அறிவு :

பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிவடைந்திருப்பதை ஆழமாக விளக்கும் திருவாசகப்பாடல் “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்...” என்பதாகும். உலகம் என்ற தமிழ்ச்சொல் “உலவு” எனும் சொல்லின் அடியாகப் பிறந்தது. உளவு என்றால் சுற்றுதல் எனப் பொருள். ஞாலம் என்ற தமிழ்ச்சொல் “ஞால்” எனும் சொல்லின் அடியாகத் தோன்றியது. ஞால் என்றால் தொங்குதல் என்று பொருள். வானத்தில் காற்று இல்லாப் பகுதி உண்டென்பதை உணர்த்தும் புறநானூற்றுப் பாடல் “வறிது நிலைஇய காயமும்” (புற-30) என்பதாகும்.

பொறியியல் அறிவு:

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த....” எனும் பதிற்றுப்பத்து பாடல் அன்றே கரும்பைப் பிழிந்திட எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை புலப்படுத்துவதாகும். “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” எனும் பெருங்கதை வரியானது அக்காலத்திலேயே ஆழ்துளைக் கிணறு இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. கிரேக்கத் தொன்மத்தின் டிராய் போரின் எந்திரக்குதிரைக்கு ஒப்பாக குறிப்பிடப்படும் “எந்திரயானை” இடம் பெற்ற நூழ் “பெருங்கதை” ஆகும்.

கனிமவியல் அறிவு:

“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்..
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்”
எனும் சிலப்பதிகாரப் பாடல் ஐவகை மணிகளும் ஒளிவிடும் திரத்தினால் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருப்பினும் அவற்றின் மூலப் பொருள் ஒன்றே எனக் குறிக்கிறது.

மண்ணியல் அறிவு:

வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்ப தமிழர் பிரித்திருந்தனர். அவையே ஐவகை நிலங்கள் ஆகும். ஐவகை நிலங்களுக்கும் உரிய உணவு, விலங்கு, பறவை போன்றவற்றை தமிழர் பகுத்தும் வகுத்தும் வைத்துள்ளனர். மேலும் நிரத்தின் அடிப்படையில் செம்மண்நிலம் என்றும் (செம்புலப் பெய நீர் போல-குறுந்தொகை), சுவையின் அடிப்படையில் உவர்நிலம் என்றும் (அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்-புறநானூறு) மற்றும் தன்மையின் அடிப்படையில் களர்நிலம் என்றும் (பயவாக் களரனையர் கல்லாதவர் –திருக்குறள்) என்றவாறு வகைப்படுத்தினர்.

அணுவியல் அறிவு:

“அனுவைத் துளைத்து ஏழ்கடல் புகட்டி” என்ற ஔவையாரின் வரியிலும், “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” எனும் கம்பரின் வரியிலும் அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்ற கருத்தை எடுத்துரைப்பதாகும்.

நீரியல் அறிவு:

“நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்”
எனும் வள்ளுவ பெருந்தகை உரைப்பது நீரானது ஆவியாகி விண்ணைச் சென்று பின் மழையாக மண்ணிற்கு வரும் சுழற்சி அறிவியல் கண்ணோட்டம் பெற்றவையாகும்.

மருத்துவ அறிவு:

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்”
எனும் திருமூலர் கூற்று உயிர் இருக்கும் வரைதான் உடல் பயணம் மேற்கொள்ளும் என்பதாகும். மருந்து எனும் அதிகாரத்தை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். சித்த மருத்துவம் என்பது பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவமாகும். “புல்லாகி பூடாகி..” எனும் திருவாசக வரிகள் பரிணாம வளர்ச்சியை விளக்குபவை ஆகும்.
“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
உடல்உரச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”..... எனும் கம்பரின் வரிகள் அறுவை சிகிச்சை மருத்துவத்தை மெய்ப்பிக்கும் வரிகளாகும்.

எழுதியவர் : மு. குணசேகரன் (1-Feb-16, 12:05 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 7336

சிறந்த கட்டுரைகள்

மேலே