பேய்கள் ஜாக்கிரதை- சினிமா ஒரு பார்வை- கவிஜி
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கி வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க
ஜனனமும் பூமியில் புதியதில் இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் தெரிந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமேலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதிமழை போன்றதே விதி என்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
'வைரமுத்து' அவர்கள் எழுதிய இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டு ஸ்தம்பித்து... நானற்றுக் கிடந்திக்கிறேன்...இன்னமும்.. மின் மயானங்களில் ஒவ்வொரு மரணத்தின் கடைசி யாத்திரைக்கும் இந்தப் பாடலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.... இதோ.. இதை எழுதிக் கொண்டிருக்கும் போதுகூட என் விரல்கள் நடுங்குகின்றன..... கண்டிப்பாக உணர்ச்சி வயப்பட்டு எழுதவில்லை... உணர்வின் வசப்பட்டே எழுதுகிறேன்...மிகைப்படுத்தலின் விளிம்பில் நிற்பதாக தோன்றினால் நான் நகைத்து விட்டு அழும் சூன்ய வெளியில்... தோன்றல்கள் சிதறலாம்...ஒவ்வொரு முறை இந்தப் பாடலை கேட்கும் போதும்... மின்னலின் சிலிர்ப்புகளாக தேகம்.. நடுவதை நான் மிரண்டு ...கவனித்திருக்கிறேன்..ஒரு வித மயக்க நிலைக்கு மனம் போவதை உணர்ந்திருக்கிறேன்...ஒரு சூனிய வெளியில்.. ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தே பயணப்படுகிறது.....ஆன்மாக்களின் மறதிக்குள்.. நிஜங்கள் என்ன செய்யும்...கேள்விகளையும் பதில்களையும்... மாற்றிக் கொண்டே இருக்கும் இந்த பாடலின் தனிமை தீரா துயரத்துள் நம்மை தள்ளுகிறது..... அது காட்டும் உலகில்... நம்மை நாமே பார்க்கிறோம்... நம்முடன் நாமே பேசுகிறோம்... அது வலி நிறைந்த வாசகம்...
இந்தபாடல்... தனியாக எழுதப்பட்ட பாடல்.. ஆனால் அதை கச்சிதமாக இந்த படத்தில்.. வைத்திருப்பது... அதுவரை இருக்கையின் இரவுக்குள்... தூங்கிக் கொண்டிருர்ந்த சினிமா விழிகள் சட்டென மேல் எழும்பி இன்னும் இன்னும் கண்ணீர் தேசத்தில்......நீந்தத் துவங்கியது..... ஆம்.. அதுவரை தன் கூட இருந்த அந்த நான்கு பேய்களும்...தனது அம்மா அப்பா அக்கா தாத்தாதான் என்று தன் பால்ய தோழியும் அவள் தோழியென்றே தெரியாத இன்றைய காதலியுமான கதை நாயகி காட்டிய பழைய புகைப்படம் கொண்டு புரிந்து கொண்டு சற்று முன் அவர்களை அடிக்காத குறையாக விரட்டி விட்டு வந்திருந்த கதை நாயகன்..அவர்களைத் தேடி அழுது கொண்டே வீட்டை நோக்கி ஓடத் துவங்குகிறான்.....
பின்னணியில் இந்தப்பாடல் பாடல் ஒலிக்கிறது.... வெல்டன் கண்மணி(இயக்குனர்)
அதற்கு முன் அந்த நான்கு பேர்களின் ஆசைகளை கதை நாயகன் தீர்த்து வைப்பது போல இருந்த காட்சிகள் எப்போதும் போல சலிப்பையே ஏற்படுதியது.. இந்த காட்சிக்கு பின் வரும் பிளாஷ் களில்தான் அது சலிப்பல்ல.. வேறு கோணம் என்று புரிகிறது .. அத்தனை ஆசைகளும் சிறுவயதில் கதை நாயகன் ஆசைபட்ட ஆசைகள் அவைகள்.....
தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து கொண்டே இருக்கும் கதை நாயகனை ஒவ்வொரு முறையும் இறந்த அப்பா அம்மா அக்கா தாத்தாதான் காப்பாற்றி இருக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் அவர்கள் பேசும் வசனம் நெஞ்சைப் பிசையும் நிதர்சனம்.....
விபத்து காட்சி ஒன்றில்... லாரியில் மோதி உருளும் காருக்குள்... எல்லாருமே.. அங்கும் இங்கும் காற்றின் வேகத்தில்.. அலை மோதி அடிபட்டுக் கொண்டிருக்கையிலும்... சிறுவன் (கதை நாயகன் ) காரின் முகப்பு கண்ணாடியில் மோதப் போகையில் அடி பட்டு மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருவாயிலும் அந்த அப்பா. தன் கை கொண்டு தன் மகனின் தலையை தடுத்து காப்பார்....
அப்பாடா.... அது சாமிடானு...... தோனுச்சு... தோன்றியது... சட்டென கண்கள் நிரம்பியது...
"இருக்கறவங்க இறந்தவங்கள மறந்திடறாங்க.. ஆனா இறந்தவங்க எப்போதுமே இருக்கறவங்கள மறக்கறதில்ல.."- எத்தனை நிஜம் பாருங்கள்... என் பாட்டி இன்னும் என் கூட இருப்பது எனக்கு மட்டுமே தெரியும் உணர்வு..... எதிர் பார்வைக்கு நகைப்பே வரும்.. மரணம்... நிஜம்.. மரணித்தவரின் அன்பு அதை விட நிஜம்.. அது எப்போதும் நம்மோடுதான் இருக்கிறது.. பிற்போக்குத் தனமான சிந்தனைக்குள் இட்டு சென்றாலும்.. வயிறென்பது பசிக்கத்தான்.. மனதென்பது உணரத்தான்... பிரிவென்பது அழுகத்தான்... உயிரென்பது உறவுதான்...
படம் நெடுக ஏகப்பட்ட சொதப்பல். ஆனால் இத்தனை அருமையான ஒரு கதையை வைத்துக் கொண்டு 'கண்மணி' ஏன் இப்படி செய்தீர்கள்... தம்பி ராமையா.. அவர் பணியை கிட்டதட்ட படம் முடியும் வரை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.....அவர்க்கும் ஒரு நெகிழ்வானக் காதல் கதை இருக்கிறது...
இன்னும்.. கொஞ்சம்.. சுதாரித்திருந்தால் இந்த "பேய்கள் ஜாக்கிரதை..."கொண்டாடப்பட்டிருக்கும்...
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும் .....
கவிஜி