போதுமானதாய் இருக்குமா - ஆனந்தி

உனை நினைப்பதற்கும்,
மறப்பதற்கும் இடைப்பட்ட
வெளியில் தான்
என் வாழ்வியலுக்கான
அர்த்தம் நிரம்பி வழிகிறது....
அனைத்து சாத்தியங்களும்
சொல்கிறது சத்தியமாய் - நீ
ஓர் நடமாடும் அற்புதம் தான் என..
இப்பொழுதுகளில் எல்லாம்
உனக்கான என் வார்த்தைகள்
மௌனமாய் மாறிவிட்ட
விந்தையொன்று அரங்கேறியிருக்கிறது.
தெரியுமா உனக்கு?
நாளும் தவிப்பினால் எனை
வீழ்த்துவது ஏன்?
கொஞ்சலில் இதுவும் ஒரு வகையோ?
வெற்றுக் காகிதத்தில் எழுதிய
இக்கவிதை என்னையும் தாண்டி
வானோக்கி சிறகடிக்கிறது
உனைத்தேடி
உனக்குள்ளாகவே.....
உன் மேல் கொண்ட தீராத
அன்பை சொல்லிவிட இந்த
ஒற்றைக் கவிதை
போதுமானதாய் இருக்குமா?
என் உணர்வுகளை
வரைந்திருக்கிறேன் கவியாய்.
முடிந்தால் கொண்டு செல்
உ(எ)ன்னுடனே.....