உனதன்பில்

மலர்கள் மட்டுமல்ல
இலை- கிளையென யாவையுமே
வீழ்ந்திடில் தஞ்சம் புகும்
விருட்சத்தின் காலடிஎன

என் புன்னகைக்கு மட்டுமல்ல
கண்ணீருக்குமான
காரணமாய்
நீயிருப்பாய்

இரை தேடி திசை திரியும்
சிறு பறவை
ஓய்வுறத் திரும்பும்
ஒரு கூடாய்

வாழ்வலையும் என் இதயம்
ஓய்வு காணும்
உன் நினைவுகளில்

கரை வளர்க்கும்
நதிப் பிள்ளை
கடற்த் தலைவன்
காதல் மடி சேரல்போல்

கண்ணீரில் அலைவுறும்
என் ஜீவன்
உன் கனவுகளின்
மடி சாயுமே

கண்ணாடிப் பிம்பத்தை
கொத்திக் கொத்திக்
களைப்புறும் சிட்டு
பசியாற வழியின்றி
தவிப்பதுபோல்

பெருவனம் எரித்து
பின் மிஞ்சிய
சிறுதணல் முன்
உயிர்ப்பு வேண்டும்
ஒற்றை விதைத் துணுக்காய் நான்

பிரிவு வெம்மைத் தவிர்த்து
காதல் உரமிடு
தளிர்க்கிறேன்
உனதன்பில்

எழுதியவர் : (3-Feb-16, 2:31 pm)
பார்வை : 89

மேலே