காட்சிப் பிழைகளோடு ரசனை உலா- 4- சந்தோஷ்

காதலின் மென் சோகத்தை பதிவுச் செய்ய காதலித்திருக்க வேண்டும் என்றில்லை. காதலை காதலாக உணர்ந்திருந்தாலே போதும். கூடவே கவிதை தயாரிக்கவும் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக ரசனையின் அகராதியில் கருதப்படும். இந்த கோணத்தில் நான் கண்டது ஒரு காட்சிப்பிழையில் நல்லதொரு கவிதைத் தயாரிப்பாளராக தோழர் கிருஷ்ண தேவ் அவர்களை.

தோழர் கிருஷ்ண் தேவிடமும் கஜலென்றால் என்ன என அறியமுற்பட்டால்.. கஜல் இலக்கணம் அறியவில்லை காதல் இலக்கணம் அறிந்திருப்பதாக மொழிந்தவர் கஜலென்பது என்ன என கூறுகிறார் என்றால்.. ..

“ஜல் ஜல் என்று பாதக் கொலுசொலிக்க நடப்பதால்
நீயுமொரு கஜல் கவிதையே ” // அன்னநடையில் சிணுங்கும் கொலுசொலியில் பிரியத்திற்குரியவள் மீட்டும் ராகமே கஜல் என்கிறாரே. மறுக்கமுடியாமல். ரசித்து ஆமோதித்துவிட்டேன்.

”ஒரு பின்மதியத் தனிமையில்
எங்கோ இருக்கும் நீயும்
எங்கோ இருக்கும் நானும்
நம்மை நினைத்துக்கொள்ளக்கூடும் ” //கூடு வேறு. உயிர் ஒன்று என்றானால் நீ என்பதும் நாம் என்பதும் நாமாகிவிடும். அந்த நாமை நாம் ஒரு பிரிவு தனிமையில் நினைத்துக்கொள்வோம் என்கிறார் கவிஞர். அதிலும் பின் மதியத்தனிமையில் என குறிப்பிட்டிருப்பது சுவராசியம்.

காதலிக்கும் போது இந்த வையகமே தெரியாது பூங்கா எம்மாத்திரம் ? காதலர் சந்திக்கும் பூங்கா என்பது பூங்கா மட்டுமே. பின்னொரு நாள் பிரிவில் பூங்கா என்பது என்னவாக மாறியதென கவிஞர் நடையில் ரசிப்போம்.

“நாம் காதல் வளர்த்த அந்தப் பூங்காதான்
மனசு சரியில்லாத போது நான் போகும் கோயில்”

தோழர் கிருஷ்ண தேவின் காட்சிப்பிழை. ஜனரஞ்சக மழை.

--


தன் காட்சிப் பிழையை பகிரங்கக் கடிதமென முன்னுரைத்த தோழர் செல்வமுத்தமிழ் காதலின் விழிகள் வினோத அன்னங்கள் என வர்ணித்தவர் பிறகு, காதலை விபரீதமானது என அச்சமேற்றுகிறார்.

”சற்று விபரிதமானதுதான்
இந்த காதல் தொற்று
ஆதியில் பக்கம் வந்தது
அந்தியில் வெட்கம் தின்றது
அடுத்தது என்னாகுமோ ?? ” காதலிணை இல்லாது அவர் மட்டும் கனா கண்டதை பகிரங்கப்படுத்தியிருப்பதாக நாம் கருதிக்கொள்ளலாம்.

”நீ என்
நிழலோடு கூட
உடன் வர மறுக்கிறாய்
நானோ உன் நினைவுகளோடு
நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்.” காதலிலுள்ள தீவிரத்தை தீர்க்கமாய் சொல்லும் வரியில் கவிஞராக ஒரு கைத்தட்டலும் பெறுகிறார்.

வாழ்த்துக்கள் கவிஞரே..!

--

காலம் காலமாக காதலுக்காக சிந்திய கண்ணீர் கடலாக,. எழுதிய கவிதை மலையாக,. முத்தங்கள் பூக்களாக இருப்பதாக கூறும் தோழர் ‘வெள்ளூர்’ ராஜாவின் சிந்தனையில் காலம காலமாக நிலாவும் சூரியனும் காதலில் என்னவாகியிருக்கிறது ?

“காலம் காலமாய்
காதலர்கள்
கவிதை உண்ட
அட்சய பாத்திரமாய்
நிறைந்து கிடக்கிறது நிலா...

காலம் காலமாய்
காதலுக்காக
அமரரானவர்களின்
கல்லறையில் எரியும்
அணையா விளக்காய்
எரிந்து கொண்டு இருக்கிறது சூரியன்” // இந்த கற்பனை.. நிஜமாகவும் இருக்கும்.. காட்சிப்பிழை நோக்கில்! அபாரம் ! வாழ்த்துக்கள் கவிஞரே.!

--
கவிதை எழுதுவதே ஒரு கலைதான். அதிலும் சந்த நயத்தோடு கவிதை அமைந்துவிட்டால் ரசனை ரகளைதான்.. காட்சிப் பிழையில் தோழர் விவேக் பாரதியின் கைவண்ணத்தில்

“இடையோடு முத்தமிட இயலாத நேரம்
இமையோரம் சிரப்பூஞ்சிக் கார்காலம் நேரும்

நடைபோடத் தெரியாத காற்றுக்குக் கூட
நயமாகப் புரிகிறது என் கண்ணின் ஈரம் ! ” இவ்வரிகள் ஈர்ப்புக்குரிய ரசனையாக அமைந்தது.


--

காட்சிப் பிழை தொடரில் ஓர் அமுதக் கானம். அது அசத்தலான கஸல் கானம்.மரபு மாமணி ஐயா காளியப்பன் எசேக்கியலின் கஜல் பாடல்.

”காலங்கள் தருகின்ற காதற்பூ வாளி
கைகளில் எடுப்பவர் தான்,குற்ற வாளி!
பாலங்கள் போடுவாய் கடலாகும் நாழி!
பதறாதே முடியும்! எளிதல்ல வா நீ!



வாய்க்காலில் நீரும் வற்றாதோ சொல்லு!
வயல்மாறி மனையாக வாய்க்கேது நெல்லு?
தாய்க்காலைப் பற்றாது பாலில்லை நம்பு!
தளராதே முடியும்! எளிதில்லை வா நீ! “ காதல் நிறைவேற காதலிணையை பக்குவமாய் அழைக்கும் விதம் தன்னம்பிக்கை விதைத்த்வர். பிரிவையும் பாடி இப்படி முடிக்கிறார் மரபு பா வேந்தர்.

“மறந்துமே மதுவை மண்ணினில் சிந்தேன்!
மதுகரம் உனக்கது தந்தேன்!
பறந்துமே போயினை பருகியே மறந்தனை
பிறந்தயென் பயன்முடித் துருகுவேன்! ”


மரபு மாமணியின் காட்சிப்பிழை மெல்லிசை கீதம்..!

--

காதலை தவிர்த்து மானுட வாழ்வியல் நெறியை தத்துவச் சிந்தனைகளாக கவித்துமாய் வழங்கி அசத்தியிருக்கிறார் தோழர் மீ.மணிகண்டன்.

ஒரு சிலவற்றை இங்கே காண்போம்.

திருக்குறளும் ஆத்திச்சூடியும் மனப்பாடம் செய்வது மட்டும் போதாது. அதை மனதில் நிலைநிறுத்தி பின்பற்று வாழ்க்கை வசந்தமாகும் என வலியுறுத்தி சொல்கிறார் கவிஞர்.

”வள்ளுவரும் ஒளவையுமே சொன்னதமிழ் புதியவை
வாங்கியதை வாழ்ந்திடவே உள்மனதில் பதியவை ”

பணத்தால் மரணத்தை வெல்ல முடியுமோ..? கேட்கிறார் தோழர். பதிலுரைப்போர் எங்கே?

“அவசரமாய் சேர்த்ததெல்லாம் காய்ந்தவெறும் புல்லே
ஆயிரத்தால் உன்னுயிரை நிறுத்தநீயும் சொல்லேன்?”


வெறும் காமப்பொருளாக நோக்காதே பெண்ணின் மார்பகத்தை. அது தாய்மையின் குறீயிடு என சாட்டை சுழற்றுவதும் பாராட்டக்கூடியது.

”மாராப்பு விலகுவதில் காமமில்லை - தாயும்
மாரீன்று வளர்த்தவள்தான் மறக்கவில்லை நீயும்.”

அறிய வேண்டுமா கஸலுக்கான இலக்கணம்? ..தோழர் மணிமீயின் காட்சிப்பிழை கவிதை ஒர் உதாரணம்.

--

தத்துவம் எங்கே கிடைக்கும். பதில் சொல்கிறார். தோழர் இரா.மணிமாறன்.


”ஆதாம் ஏவாள் மறுத்திருந்தால் - காதல் என்பது வளர்ந்திருக்காது;
சீதா இராமனை வெறுத்திருந்தால் – அயோத்தி புகழை அடைந்திருக்காது;
இராதா கிருஷ்ண லீலைகள் - இரகசியம் சொல்லும் இரதங்களில்
இராத்திரி நேர பூஜைகளில் - தத்துவம் கொட்டும் மெத்தைகளில் ! ”

கவிஞர்கள் காலத்தின் கண்ணாடியாகவும் இருத்தல் வேண்டும். சமீபத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பாதிப்பினால் பொதுமக்கள் அவதியுற்றப்போது ஓர் அரசாங்கத்திற்கு இணையாக இணையதளத்தில் பொழுதுப்போக்கிய முகநூல் உறுப்பினர்கள் நிவாரணப்பணி மேற்கொண்டதை தனது காட்சிப்பிழையில் மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

”சமூக வலைதளங்கள் - நலப்பணியில் உற்ற சேவகர்கள் !
கணினி காதலர்கள் - விரல்நுனியில் உலகம் அறிபவர்கள் ! ”

இதுபோல பல கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை ஒரு பெரும் தொகுப்பாக வழங்கிய தோழர் மணிமாறனின் காட்சிப்பிழை... பலரசப் பேழை.
==

உண்மையில் காட்சிப்பிழை என்பது வ்ரலாறுகளும் , சங்ககால இலக்கியங்களும் நம் மனதிற்குள் ஆழமாக பதித்துச் சென்ற ஆணாதிக்கத்தனம். நம் பாட்டன் பாரதியும், தந்தை பெரியாரும் பெண்ணடிமைக்கு எதிராக சாட்டையை சுழற்றியதன் விளைவாக இன்று.. பெண்ணுரிமை ஒரளவு நிலைநாட்டப்படுகிறது.பெண் சுதந்திரம் பேணப்படுகிறது.ஆனால் முற்றிலுமாக அல்ல என்பது வெட்ககேடான விஷயம். இந்த காட்சிப்பிழை தொடரில் பெண்ணியம் பேச தன் பேனாவை சாட்டையாக சுழற்றியிருக்கிறார் தோழர் பொள்ளாச்சி அபி.

பெண்ணடிமை கொடுமைகளை காப்பியங்களிலிருந்து.. பல வரலாற்று நிகழ்வுகளிலிருந்து தோண்டியெடுத்து காட்சிப்படுத்தியிருக்கிறார். .


”காலடி மிதிக்க கல்லாய் படைத்தாய்
அகலிகையென்றே பெயரைக் கொடுத்தாய்
எவனோ செய்த பாவத்தின் பலனை
எனக்கே அளித்தாய் ஏனிந்த வஞ்சனை..?” // இந்திரனால் வஞ்சகமாக வன்கொடுமைக்கு ஆளான அகலிகையின் கேள்வி .

”என்னை வைத்தே பகடை உருட்டினாய்
கண்களை மூடி தருமத்தை விரட்டினாய்
சபையின் நடுவே ஆடையைப் பறித்தாய்
மானம் இழந்தபின் அவதாரம் எடுத்தாய்..!” // பாஞ்சாலியின் சாட்டையடி கிருஷ்ண பரமாத்மாவிற்கு .

இது போல நிகழ்காலத்தில் நிகழும் பெண்மைக்கு எதிரான அநீதிகளை கண்டிக்கும் வரிகளிலும் காலத்தின் கண்ணாடியாகவும் கவிஞர் பெருமையடைகிறார்.

“அறங்கள் பாடிட ஆயிரம் வேதங்கள்
இருந்தும் ஏனோ நிகழுது பேதங்கள்..
பழமையின் மடமையில் இருந்தது போதும்
புதுமையின் கேள்விகள் புதிதாய் பிறக்கட்டும்.! ” கேள்விகள் பிறக்கட்டும் .அவையே புரட்சியின் தூறல்கள்.
தோழர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு செங்கொடி சல்யூட்.

இதற்கு அடுத்தாக சிறப்பு காட்சிப் பிழையாக தோழர் வழங்கிய கவிதையில் சமுதாய நல்லிணக்கத்தை பாடியுள்ளது போற்றதக்கது.

“மதங்கள் பிரித்த மனங்களின் அபஸ்வரங்கள்
கரங்கள் இணைந்ததால் பாடின சுபஸ்வரங்கள்

மேவிடும் இச்சைகள் பிரித்ததாய் இருந்த மனது
காவியும் பச்சையும் கலந்ததாய் வெள்ளை ஆனது ” சமீபத்திய பெருமழை நமக்கு உணர்த்திய உண்மை. தோழரின் வரியிலும் வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது.


அதிலும்,

“இனி காதலுக்கென்றே கடவுளராக நாமும் மாறிடுவோம்..
கரும்பு வில்லை சுமந்தவருக்கு ஓய்வு கொடுத்திடுவோம்.! ” மன்மதனுக்கு கடவுள் பதவியில்லை இனி. நமக்கு நாமே திட்டப்படி.. நாமே கடவுள். காதலர்களே கடவுள் என்கிறாரோ கவிஞர்.


மற்றொரு காட்சிப்பிழையில், பாடல் ராகத்திற்கு ஏற்ப எழுதிய கவிதையிலும் சாதி மதங்களை வேரறுக்க மொழிவது சிறப்பு...

“மாறாது காதல் நதி
வேறாகும் வாழ்க்கை விதி
சாதிமதங்களைத் தொலைப்போம் வா..
புதுவேதங்கள் படைப்போம் வா.. ” //
சாதியற்ற மதமற்ற சமுதாயம் படைத்திட வெகு முனைப்போடு எழுதியிருக்கும் தோழர் பொள்ளாச்சி அபிக்கு பலத்த கரகோஷத்துடன் கைத்தட்டல்கள்.

தோழர்களே.

இந்த காட்சிப்பிழைத் தொடரில் கஸல் என்பது யாதென என அறியமுற்பட்டதில் பல ரசனையான கவிதைகளை பருகினேன். பல சிந்தனைகள் கற்பனைகள் வியக்க வைத்தன. என்றாலும், தோழர் திரு.அகன் அவர்களும், தோழர் திரு.சங்கரன் ஐயா அவர்களும் தொடரில் தொடர்ந்து அறிவுறுத்தி வலியுறுத்திய கஸல் கவிதை உதாரணங்கள் மற்றும் விதிகளுக்கு ஏற்ப ஒரு சில தோழர்களே கஸல் கவிதையை அளித்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.


இக்கட்டுரை முழுக்க முழுக்க எனது வாசிப்பு அனுபத்தில் தித்தித்த ரசனை பகிர்தல்கள் மட்டுமே அன்றி இது திறனாய்வுக் கட்டுரை அல்ல. திறனாய்வு குறிப்பிட்ட பா வகைமையில் திறன் வாய்ந்தவரே செய்யக்கூடியது என்பதை நானும் அறிவேன்.

மேலும், இந்தத் தொடரில் ஆவலுடன் பங்கேற்ற அனைத்து கவிஞர்களும் நல்லதொரு ரசனை படையல் படைத்தோடு அல்லாமல் தொடர் வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றாலும் குறிப்பிட்ட சில தோழர்கள் தொடரில் பங்கேற்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு தொடர் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் சமயத்தில் தடை ஏற்படுத்துவது போல பின்வாங்கியது வருத்திற்குரியது. கண்டனத்திற்குரியதுமாகும்.
ஒட்டுமொத்தத்தில் இந்த காட்சிப் பிழைகள் தொடர் என்னளவில். கவிதைத் திருவிழாகவும் அமைந்தது. கஸல் பயிற்சி முகாமாகவும் அமைந்தது.

இதுவரையிலும் காட்சிப் பிழைகளோடு ரசனை உலா வந்தமைக்கு நன்றி என் அன்புத் தோழர்களே..!

--------------------------------
நன்றி :
கட்டுரை எழுத அழைத்த
தோழர் திரு.ஜின்னா அவர்கள்.

கவிதைகளின் இணைப்புகளை ஒரு சேர வழங்கிய
தோழர் திரு. முரளி அவர்கள்


சிறப்பு நன்றிகள் :

இத்தொடரில் கஸலை கற்றுக்கொள்ள கஸல் இலக்கணங்களை வழங்கிய

தோழர் திரு. அகன் அவர்கள்.
தோழர் திரு.சங்கரன் அய்யா அவர்கள்.


--
கூட்டு முயற்சி தொடர வேண்டும்.
தோழமையுணர்வு பெருக வேண்டும்.

விருப்பத்துடன்,

இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (5-Feb-16, 4:22 am)
பார்வை : 426

மேலே