பாடல் 6 - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

இப்பாண்டிய மன்னன் யாகசாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்தவன் என இவன் பெயரால் அறியலாம். இவனை வாழ்த்தும் நெட்டிமையார் எனும் சான்றோர் ‘பஃறுளியாற்று மணலினும் பல்லாண்டு வாழ்க’ என வாழ்த்துதலால், இவன் குமரிக்கோடும், பஃறுளியாறும் கடல் கொள்ளப்படுவதற்கு முன்பே நம் தமிழகத்தில் வாழ்ந்தவனென்று அறியப்படுகிறது.

இப்பாண்டியனைப் புகழ்ந்து இப்பாடலைப் பாடும் காரிகிழார் என்னும் சான்றோர், காரி என்னும் ஊரினர். இவ்வூர் தொண்டை நாட்டில் உள்ளதென்றும், இந்நாளில் இவ்வூர் இராமகிரி என்று வழங்கப்படுகிறது எனவும் தெரிகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டின் 5

நீர்நிலை நிவப்பின் கீழு மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
பற்ற லிலியரோ நிற்றிறஞ்சிறக்க 10

செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட செய்வுறுநன்கலம் 15

பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே 20

வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய 25

தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே.

பதவுரை:

(படப்பை: enclosed garden – தோட்டக்கூறு, Agricultural town or village - மருதநிலத்தூர்)

பொருளுரை:

வடக்கில் பனி மிகுந்த உயரமான இமயமலைக்கு வடக்கும், தெற்கில் குமரி மலையினின்று ஊற்றெடுத்துப் பாயும் குமரி ஆற்றிற்குத் தெற்கும், கிழக்கில் கரையை மோதுகின்ற, சகரரால் (சகரனின் மகன்கள் அறுபதினாயிரம் பேர்) தோண்டப்பட்ட சமுத்திரத்திற்கு கிழக்கும், மேற்கில் மிகப் பழமையான ஆழமான கடலுக்கு மேற்கும், கீழே நிலம், ஆகாயம், சுவர்க்கம் என மூன்றும் இணைந்து அடுக்கிய அமைப்பின் முதற்கட்டாகிய நீர்நிலை நிறைந்த நிலத்தின் கீழும், மேலே அமைந்துள்ள கோ லோகத்திலும் மட்டுமல்லாது உனது படை, குடி முதலிய திறங்கள் பெற்று பேரும் புகழுடன் சிறக்கட்டும்!

பரந்த சிறப்பான பொருட்களை ஆராயும் துலாக்கோலில் உள்ள சமமாகக் காட்டும் கருவி போல, ஒரு பக்கம் வளைந்து கொடுக்காமல் இருப்பாயாக!

போர் செய்வதற்கு மாறுபட்ட தேசத்தின் மீது உனது கடல் போலும் படை உள்ளே மிகுதியாகச் சென்று அடர்ந்த நிறத்தையும் சிறிய கண்களையும் உடைய யானைகளைத் தடையின்றி ஏவி பசுமையான விளைநிலங்களுடைய அரிய மதிலரண் பலவற்றையும் தனதாக்கிக் கொண்டு அந்த அரணிலிருந்து பெறப்பட்ட அழகிய நல்ல அணிகலன்களை பரிசு பெற வருவோர்க்கு அவரவர் தகுதிக்கேற்ப வழங்கி உனது கொற்றக்குடை முனிவரால் போற்றப்படும் முக்கட் செல்வனாகிய சிவபெருமான் கோயிலை வலம் வருவதற்கு தாழ்க!

உனது தலை, நான்கு வேதத்தினை அறிந்து சிறந்த அந்தணர் உன்னை நீடு வாழ்க என வாழ்த்தும் கையின் முன்னே வணங்குக பெருமானே!

இறைவனே! நீ அணிந்திருக்கும் மாலை உன் பகைவரது நாட்டைச் சுடுவதால் ஏற்படும், இனிய மணமுடைய புகையால் வாடட்டும்!

உனது சினம், சிறந்த ஆபரணங்கள் அணிந்த உன் தேவியரின் ஒளியுடைய முகத்தின் முன் செல்லாது தணிக! போரில் வென்று, வெற்றி முழுவதையும் உன் மனத்தினில் அடக்கி தணியாத வள்ளன்மையுடைய தகுதியால் மாட்சிமைப்பட்ட குடுமி!

குளிர்ந்த கதிர்களையுடைய நிலவைப் போல குளிர்ச்சியுடனும், மிக்க ஒளி பொருந்திய சுடுகின்ற கிரணங்களையுடைய சூரியனை போல ஒளியுடனும் இந்த நிலமாகிய உலகத்தில் நீ நிலைபெறுவாயாக, பெருமானே!

விளக்கம்:

இப்பாடல் பாடாண்திணை யாகும்.

துறை: நகர்வலஞ் செயற்குப் பணியரென வீடும், ஏந்துகை யெதிர் இறைஞ்சுக என அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிக என இன்பமும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்கவென அரசியல் கூறப்படுதலால் இது செவியறிவுறூஉம் துறையாகும். மதியமும் ஞாயிறும் போல மன்னுக என்றதனால் வாழ்த்தியல் என்ற துறையுமாகும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் பெறுக என வாழ்த்துவது சான்றோர்க்கு இயல்பாதலால், காரிகிழாரும் முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியற்கு, பணிக என்பதனால் வீடும் இறைஞ்சுக என்பதனால் அறமும், வாடுக என்பதனால் பொருளும் தணிக என்பதனால் இன்பமும் பெற வாழ்த்தினார்.

சான்றோரால் தலையாயது எனக் கருதுவது வீடாதலின் அதை முதலிலும், கடைசியாவது இன்பமாதலின் அதனை இறுதியிலும் கூறுகிறார். வீடு பேற்றுக்கு வாயிலாதலின் அறத்தை வீட்டை அடுத்தும், இன்பத்துக்கு ஆக்கமாதலின் பொருளை அறத்தை அடுத்தும் வைத்துக் கூறுகிறார்.

வேந்தனிடம் நடுவுநிலை இல்லையென்றால் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய உறுப்புகள் சிறப்பாக இருந்து அரசியலுக்குத் துணை நிற்காது என்பதால் ‘ஒரு திறம் பற்றலியரோ’ என்று அறிவுறுத்துகிறார்.

பகைவர் அரணாகிய கோட்டையைக் கவர்ந்து, பகைமன்னர் திறையாகத் தரும் செல்வத்தைக் கொண்டு வந்து பரிசிலர்க்கு ஈவது பண்டைத் தமிழ்வேந்தர் மரபு. பரிசிலர்க்கு வழங்கும் போதும் பரிசிலரது தகுதியறிந்து அதற்கேற்ப வழங்க வேண்டுமென்பதை ‘வரிசையின் நல்கி’ என்கிறார்.

மகளிர் ஊடுமிடத்துச் சிறிது சினம் நிகழினும், ஊடலை உணர்த்துவதில் கவனம் செலுத்தாமல் அவரை மனம் வாடச் செய்தால் காதலின்பத்தைக் கெடுக்கும் என்பதால் ’செலியரத்தை வெகுளி’ என்றார்.

இப்பாடலில் காரிகிழார் ‘முனிவர் முக்கட் செல்வர்’ என்பதிலிருந்து முனிவரால் போற்றப்படும் அருந்தவச் செல்வம் முக்கட் செல்வராகிய ஈசனிடம் உண்டென்று அறிந்துகொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-16, 1:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 408

மேலே