கண்டதும் காதல்
இதிகாசக் காதல்!
காவியக் காதலின்
கனிவினை சொல்லிட
காலங்கள் போதிடுமோ?
கண்டதும் காதலால்
கொண்டாடும் உணர்வினை
கவிதைகள் தந்திடுமோ?
வால்மீகி வார்த்தையில்
வாராத காதலை
கம்பனும் வரைகின்றார்! –
வாழ்க்கையின் பொழுதினில்
காதலில் கலந்தவர்
தினம்தினம் மகிழ்கின்றார்!
அணுவினைப் பிளந்ததன்
அறிவியல் சொன்னவர்
ராமனை அழகென்றார்! –
மின்னல்கள் கூட்டத்தின்
ஒளியதன் அரசியை
சீதையின் வடிவென்றார்!
மிதிலையின் நகரினில்
அழகிய வீதியில்
ராமனும் நடக்கின்றான் –
கன்னியர் மாடத்தில்
பொன்னொளி வீசவே
சீதையும் இருக்கின்றாள்!
தோளினைக் கண்டவர்
தாளினைக் கண்டவர்
மொத்தமும் காணவில்லை – அவன்
தேகத்தின் அழகினை
கண்களில் கண்டவர்
கொஞ்சமும் மீளவில்லை!
திருமேனியும் செழித்தவள்
திருமகள் ஆனவள் –
தங்கத்தில் குழைந்தவளோ? – அவள்
மன்மதன் அமிழ்தினில்
தொய்த்திட்ட தூரிகை
ஓவியம் ஆனவளோ?
கருத்த அவள் கூந்தலில்
கார்குழல் மேகங்கள்
கண்மூடி மறைந்தனவோ?
அகிலும் சந்தனமும்
இழைத்த நறுவாசமும்
இதயத்தில் நுழைந்ததுவோ?
அண்ணனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள் –
கண்டதும் காதலங்கே! –
கண்களும் தின்றதால்
புக்கு இதயம் எய்தினர்-
காதலில் மலர்ந்தனரே!
இன்னரும் நலத்தினள் –
இணையிலா வளத்தினள் –
இருதயம் தொலைத்தனளோ?
செம்மண்ணின் நிலத்தினில்
பெய்திட்ட மழைபோல்
பிரியவும் சாத்தியமோ?
கடைக்கண் பார்வையில்
காதலில் வீழ்ந்தவன்
வீரத்தில் மிளிர்கின்றான்! –
செம்பொன் எழிலாள்
வேல்விழி கண்டவன்
சிவதனுசும் முறிக்கின்றான்!
வில்லாளன் வீரத்தை
தோழியர் உரைத்திட
சீதையும் இனிக்கின்றாள்! –
மணாளன் இவனென
மனதினில் நெகிழ்ந்தவள் –
மன்றத்தில் இணைகின்றாள்!
தையலின் அழகினில்
மையலில் வீழ்ந்தனன்
மைவண்ணன் ராமனுமே –
தாமரை இதழாள்
தளிர்க்கரம் பற்றினன்! –
திருமண வைபோகமே!
வாழ்த்துக்கள் வழங்கியே
வானத்து தேவர்களும்
வரிச்சங்கம் ஊதுகின்றார் –
தென்றலின் மென்மையாய்
தெள்தமிழ் அமுதமாய்
காதலை போற்றுகின்றார்!