இதுதான் காதலா

காதல் என்கிற பெயரால் காவுவாங்கப்பட்டு
கண்ணீர்விடும் பெண்களின் துயரத்திற்கு
இக்ககட்டுரை காணிக்கை.

இருதினங்களுக்கும் முன்னர் நான் பெரியகுளம், தேனி, போடி, போடிமெட்டு, குரங்கணி ஆகிய பகுதிகளில் ஒரு புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேர்வுசெய்ய சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிட்டியது. அதற்கான பயணத்தில் போடியிலிருந்து காரில் சென்றபோது, அந்த காரின் ஓட்டுனர் மற்றும் பயணித்தவர்களிடையே (நான் உட்பட) அப்பகுதிவாழ்மக்களின் வாழ்க்கைச் சூழல்பற்றி பேச்சுவந்தது.

எங்களின் உரையாடலினிடையே நானறிந்த அந்த விஷயத்தின் சுருக்கம்: “ பெரும்பாலும் போடி பகுதியிலிருந்து தினந்தோறும் கிட்டத்தட்ட போகவர சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணித்து, கேரளாவிற்கு சென்று அங்குள்ள தேயிலைத்தோட்டங்களில் பணிபுரிகின்றனராம். அதுவும் மலையேறும் ஜீப்பில் அதிகளவில் திணிக்கப்பட்ட நிலையில்- திணறலுடன்… பலநூறுபேர் பயணிக்கின்றனர். தினசரி ரூ. 200/- என்கிற மிகக்குறைந்த அளவில் கூலி. வேறெந்தவிதமான விசேஷமான சலுகைகளுமில்லை.(ஜீப்பிற்கு மட்டும் பயணக்கட்டணமில்லையாம்.). மிக அதிகாலையில் பயணிக்கும் இவர்கள் மலைப்பாதயில் பயணித்து, அங்கு சேர்வராம். ஜீப்பினை நிறுத்திவிட்டு அதன் டிரைவரும் தேயிலைத்தோட்டத்தின் பிற வேலைகளுக்குச் செல்வாராம். பின் அந்திசாயும் நேரம் மீண்டும் வந்தவழியே அதே ஜீப்- அதேபோல் பயணம்- வந்து சோறாக்கி- உறங்கி- மீண்டும் மறுநாள் இதேபோல் வாழ்க்கை. . நானே நேரில் கண்டேன். , சரி, இதேபோல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடத்தான் செய்கிறார்கள். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஆனால், அப்போது இச்செய்தியுடன் இணைப்பாக ஒரு செய்தி கிட்டியது. அதைக்கேட்டதும் தலைகிறுகிறுக்கத்தொடங்கியது.

அந்த விஷயம்: தென்மாவட்டங்கள், மற்றும் சில மாவட்டங்களிலிருந்து தங்களைக் காதலிப்பதாகக் காட்டிக்கொள்ளும் காதல் ரோமியோக்களை நம்பி பருவப்பெண்கள் (நன்குபடித்து பட்டம் பெற்ற பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல) தங்களது வீட்டினருக்குத் தெரியாமல் நகைகள், பணத்துடன் ஓடிவருகின்றனர். அவ்வாறு வரும் அந்தகாதல் ஜோடிகளில் தங்கள் கையிருப்பு கரைந்தவுடன் கையைப்பிசைகின்றனர். அல்லது நடிக்கின்றனர். அப்போது அப்பெண்கள் ”வந்ததுதான் வந்துவிட்டோம்… இனி எப்படி குடும்பத்தார் முகத்தில் விழிப்பது?” என கலங்கியிருக்கும்போது அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதுதான், நான் மேலே கூறிய ”தேயிலைத்தோட்டப்பணி”. இதுகுறித்து அரசு மற்றும் பொதுமக்கள் வட்டத்தில் அனைவரும் நன்கறிந்ததாகவே தெரிகிறது. போடிமெட்டில் மலையேறும் போது ஜீப்புகளை பதிவுசெய்ய ஒரு செக்போஸ்ட் உள்ளது. காணாமல் போகும் பெண்களைக் கண்டுப்பிடிக்க புகார் பெறப்பட்டால் அது ஆங்காங்கு அனுப்பப்படுகிறது. அதுபோல் இப்பகுதி போலீஸாருக்கும் அனுப்பப்படுகிறது. அங்கு நிற்கும்போலீஸார் ஓடிவந்த பெண்களின் புகைப்படத்தினை வைத்துக்கொண்டு அந்த சாலைசந்திப்பில் நிற்க- அந்தபெண்களை அலேக்காக பிடிக்கின்றனர். ஆனால், அவர்கள் இழந்த வாழ்க்கை? அப்பகுதியில் இவ்வாறு ஓடிவந்தவர்களுக்கென்றே ஒரு ஏரியாவே உள்ளதாம். அதைவிவரிக்க நேரம் போதாது.

காதல் என்கிற பெயரால், கயவர்களை நம்பி, கண்மூடித்தனத்தில் சிக்குண்டு, காதலில் குதித்து, காமத்தில் உழன்று, உறவுகளை ஏய்ப்பதாகவும், புரட்சியில் பொங்குவதாகவும் எண்ணிக்கொண்டு… தங்கள் சொந்தசெலவில் தங்களுக்கே சூனியம் வைத்துக்கொள்வதேன்? இதற்கு ஏன் கல்வியறிவு? 33% இட ஒதுக்கீடு?

ஒருபெண் நன்றான வாழ்க்கைத்தரத்தினை எட்டினால்… ஒருதலைமுறையே சிறக்கும் என்கிறார்களே… அதேபோல் சீரழிந்தால்… ஒரு தலைமுறையே சீரழியாதா?

பாரதியின் புதுமைப்பெண்களா இவர்கள்? பெரியார் விரும்பிய பெண்விடுதலையா இது? காமராஜரின் கல்விபரப்புரை இதற்குத்தானா?

எத்தனையோ பொதுப்பிரச்சினைகளை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து பொதுநல வழக்காக கையாண்டுள்ளது. அதேபோல் இதனையும் கையாளக்கூடாதா?

பாதுகாப்பில்லாத வாழ்வாதாரத்தில் அல்லாடும் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப்பற்றி தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு ஏதாவது தெரியுமா?

ஆண்டாண்டு காலமாக ஆண்டுவரும் அம்மாவுக்கோ… அய்யாவுக்கோ… இதைத்தீர்ப்பதற்கு ஆர்வமுண்டா? இதனை ஒரு மாநிலத்தின் பிரச்சினையாக மட்டுமல்லாமல்… இதனை தேசிய கண்ணோட்டத்துடன் ஆய்வுசெய்து நலன் சேர்க்க… மத்திய அரசு நேரிடையாகத்தலையிட வேண்டும். இதனை பலருக்கும் பகிர்ந்து, விழிப்புணர்வுக்கு வகைசெய்யுங்களேன்.

எழுதியவர் : மு,பழனிவாசன் (6-Feb-16, 8:30 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 734

மேலே