வானவர் ஆவோம்
அள்ளி வீசிடும் அனலிலா காற்றில்
உள்ளம் போல ஆடிடும் நாணல்,
வெள்ளை நுரைகரை இடையினில் ஆறு.
துள்ளி ஓடிடும் வளைந்து நெளிந்து
.
சாதம்போற் பரவிய வெள்ளை மணலும்
பாதம் நெருடுங் கூழாங் கற்களும்
சாதனமெ யென சமைந்த கருவியாய்
சாதகம் செய்யும் நீர்ப்பாடல் தன்னை
காடை கவுதாரி மேயும் வனத்தில்
ஆடை இடுப்பில் மட்டுமே அணிந்து
வாடைக் காற்றைப் பொருட் படுத்தாமல்
வீடை மறந்து மண்ணிலே புரண்டு
கால் விரல் இடையில் களிமண் சகதி
சாலுதல் கண்டு சாட்டவரை கொண்டு
காலாழ் தன்னை காத்திரை ஆக்கி
வாலாமை நீக்கும் வானவர் ஆவோம்