வேறு நிலாக்கள் 18 பழநி பாரதி

வெள்ளைக் காகிதம்
***************************
சூரியனுக்குக் கீழ்
ஒரு வெள்ளைக் காகிதத்தை
விரித்து வைத்திருக்கிறேன்
கொல்லப்பட்ட ஒரு மரத்தின் ஆவி
கடந்துபோவதைப் போல
காற்றில் அது
தானாகப் படபடக்கிறது
அதில்
ஒரு கழுகின் நிழல் விழுகிறது
கூடிழந்த பறவைகளின் எச்சம் தெறிக்கிறது
இந்த வெள்ளைத் தாளில்
சுதந்திரமாக
காதல் கடிதம் எழுதிக்கொள்ள
ஒரு பெண்ணிடம் தரலாம்
காதலின் பொருட்டு
அவள் முகத்தில்
திராவகம் வீசப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?
ஒரு விவசாய நிலத்தின்
பச்சை நிறத்தைத் தீட்டலாம்
அதன் கீழ்
புதைக்கப்பட விருக்கும்
மீத்தேன் வாயுக் குழாய்கள் வெடித்தால்
நான் என்ன செய்ய முடியும்?
இராமேஸ்வரத்தின் கடலில்
இந்தக் காகிதத்தால்
ஒரு படகு செய்து அனுப்பலாம்
இலங்கை இராணுவத்தால்
கொல்லப்படும் மீனவரோடு
இது கரையொதுங்கினால்
நான் என்ன செய்ய முடியும்?
நம் அரசியல்வாதிகளின்
அசல் சொத்துக்கணக்குகளை
இதில் அச்சடிக்கலாம்
இறையாண்மைக்கு எதிராக
கைது செய்யப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?
சூரியனுக்குக் கீழ்
இந்த வெள்ளைத் தாளை
வைத்துக்கொண்டு
நான் என்னதான் செய்ய முடியும்?
- பழநிபாரதி
*(தோழர் பழனி பாரதியின் இசைவோடு நூலில் இடம் பெறும் )