நடமாடும் நதிகள் 7

____________________________________________________________________________
எனக்கென்று ஒரு பாணியை வகுத்து , இதுவரை ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த நான் , கஸல் என்ற மாற்று பாதையிலும் சென்றேன் .உங்கள் வரவேற்பில் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன் .
இன்று “ ஹைக்கூ “ என்ற புதிய பாதையில் பயணம் மேற்கொண்டுள்ளேன் . குறைவான வரிகளில் சரியான பொருளைக் கொணர்வது என்பது இதன் மூலம் முடியும் என்பதை புரிந்துகொண்டு “ நடமாடும் நதிகளில் “ நானும் ஒரு நதியாக இணைந்து என்னுள் எழுந்ததை, எட்டிய அளவிற்கு இங்கு குறுங்கவிதைகளாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
தவறை குறைகளை சுட்டிக்காட்டினால் என்னை திருத்திக்கொள்ளவும் முறைப்படுத்திக் கொள்ளவும் பேருதவியாக அமையும்.
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் , எண்ணங்களை பதிவிடுங்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மலையுச்சியில் நான்
அருகாமையில் என் தாய்
நிலவு !
********************************
கோவிலில் கூட்டநெரிசல்
சுற்றிலும் பலத்த காவல்
உண்டியலுக்கு !
***********************************
முன்னோரைக் கண்டேன்
என்னைக் காணவில்லை
வாக்காளர் பட்டியல் !
***********************************
அலைபேசி கோபுரத்தை பார்த்து
அழுதுக் கொண்டிருந்தது
தபால் பெட்டி !
**************************************
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
கூட்டாய் ஒரு குடும்பம்
புகைப்படத்தில் !
***************************************
பழுத்த இலைகளால்
ஒரு மரம்
முதியோர் இல்லம் !
*****************************************
நடுநிசியில் தழுவல்
இறுதியும் ஆரம்பமும்
புத்தாண்டுப் பிறந்தது !
******************************************
உண்மையை வாங்கிடும்
போலியை பெற்றிடும்
வாக்குப் பெட்டி !
*********************************************
நீரில்லாத ஏரி
கரைந்திட்டக் கரை
மணல் கொள்ளை !
***************************************************
மறந்த நிலையில்
பழைய பொருட்கள்
உழவன் வீட்டில் கலப்பை !
*********************************************
விளம்பரமில்லா வியாபாரம்
முதலீடு இல்லாமல் லாபம்
இன்றைய அரசியல் !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எனது மனமார்ந்த நன்றி இவர்களுக்கு : -
---------------------------------------------------------------------
தொடர் தொகுப்பாசிரியர் திரு ஜின்னா
முகப்பட வடிவமைத்த திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பாளர் திரு முரளி T N
முகப்பட பெயர் பதித்தவர் திரு ஆண்டன் பெனி
மற்றும் என்றும் எனக்கு ஊக்கமளித்து ஆதரவினைத் தரும் எழுத்து தளத்தின் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி .
_____________________________________________________________________________
பழனி குமார்