பாலைவனப்பூக்கள்

இங்கே
சில தியாகிகள்
உறங்குகிறார்கள்,
அமைதியாகச் செல்லுங்கள்..!

ஒரு மணிநேர
யுத்த நிறுத்தம்,
இது போராளிகளின்
ஓய்வு நேரம்...
தொல்லை கொடுக்காதீர்..!

குடும்பத்துக்காக
முத்துக் குளித்த சுழியோடிகள்
சுவாசம் தேடுகிறார்கள்,
கொஞ்சம்
வழி விடுங்கள்..!

இவர்கள்
சூறாவளியோடு
போராடும் சுடர்கள்,
கடைசித் துளி வரை
எரியும் மெழுகுகள்..!

பாலையில் பாடுபட்டு
உறவுகளின் இருளகற்றும்
இவர்கள்...
உடைந்து வீழ்ந்த
சூரியத் துண்டுகள்..!

குறுந் தகவலில்
முத்தம் கொடுத்து
குரலோடு மட்டும்
குடும்பம் நடத்த
அனுமதிக்கப் பட்ட
கைதிகள்..!

தினமும் எரிந்து
சாம்பலிலிருந்து மீளும்
இவர்கள்தான்
அந்த 'பீனிக்ஸ்'.
முடிந்தால்...
தூரமாய் நின்று
கவிப் பூக்கள் கொய்து
துயில் கலையாது
தூவி விட்டுச் செல்லுங்கள்..!

எழுதியவர் : ஹகீம் ரொக் (13-Feb-16, 11:24 am)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 117

மேலே