பெண்கள்

கொஞ்ச காலமாக எனக்கு தோன்றிக்கொண்டே இருக்கிறது...

சீதையா கண்ணகியா என்று பல விவாத மேடைகளில், தமிழ் தளங்களில், சமூக தளங்களில் பலர் தங்களின் கருத்துகளை பதித்து உள்ளார்கள்.. இவ்விருவரே பெண் அடிமை தனத்திற்கும், பெண் போராடும் குணத்திற்கும், சொல் பேச்சு கேளாதவர்கள் பெண்கள் போன்ற எடுத்துக்காட்டுகளாக வலம் வருகிறார்கள்..

உண்மையில் இவ்விரு மாதர்கள் மட்டும் தான் நாம் கொண்ட சமுதாய பெண்களா???

சீதை தன் சுதந்திரத்தால், வனவாசம் வரை வந்துவிட்டாள்.. அவளின் சொற்படியே ராமலக்ஷ்மணர் நடந்து கொண்டார்கள்... மானை தேடுவதில் இருந்து, லக்ஷ்மணன் போட்ட கோட்டை தாண்டும் வரை சீதையின் சுதந்திரம் இருந்தது..

கண்ணகி என்ன நடந்தாலும் சரியே என வீட்டிலேயே முடங்கி போய்விட்டாள்.. கோவலன் தன்னிஷ்டம் போல நடக்க தொடங்கிவிட்டான்..
இனி இதே விதி என்றே கிடந்தவளுக்கு கோவலன் வருகை நிச்சயம், வாழ்கையில் சுதந்திரமாய் இருக்க போவதாய் தான் நினைத்திருப்பாள்..

என்னவோ இருவருக்குமே நல்லதாய் அமையாமல் போய்விட்டது.. ஒரே அக்னி தான் ஒருவள் தனை நிரூபிக்க வீழ்ந்தாள். மற்றோருவள் தன் கணவனை நிரூபித்து, மற்றவர்களை வீழ செய்தாள்..

இவ்விருவருமே தன் பக்க உண்மையை நிரூபிக்க மட்டுமே செய்தார்கள்.. வாழவில்லை..

இன்று பல பெண்களை கண்ணகியின் முன் சுபாவம் போலவும், சீதையின் பின் சுபாவம் போலவும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்..
உண்மையில் நாங்கள் இந்த காலத்தில் ஒரு வித போர்க்களத்தில் தான் வாழ்கிறோம்.. நேரத்திற்கு தகுந்தபடியே நாங்கள் பேசுவதும் பேசாது அமைதியாக இருப்பதும் தொடர்கிறது.. அதை திமிர் ,ஆணவம் என்றோ; பயம், பலவீனம் என்றோ எண்ண வேண்டாம்.. வீணான சிலவற்றை எங்கள் மேல் திணிக்காதீர்கள்.. எந்த சூழ்நிலையிலும் எங்களின் தாய்மை குணம் குறைவதில்லை..

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (13-Feb-16, 5:29 pm)
Tanglish : pengal
பார்வை : 1907

மேலே