குளக்கரையில்--------

~ ~ ~ ~ ~ ~ ~ ~
வெண் பறவைகளின் சிறகுகள்
வருடிக் கொடுக்கும் ஆகாயம்
தடவித் தடவி
வானின் வியர்வையை
விசிறி வருடும் வண்ணத்துப்பூச்சிகள்
கணத்துக்குக் கணம் மோகித்து
சல்லாபிக்கும் ஆனந்த இரைச்சலோடு
கார் மேகங்கள்
அருகே ஈரம் கசிந்து
உருகிக் கொண்டிருக்கும்
குனிந்த தலை மலைகள்
தீண்டும் சுகத்தோடு சுரக்கும்
தென்றலின் சுகந்தம்
உச்சி முகர்ந்து சிலுசிலுப்பில்
தவழ்ந்த பச்சை மரங்கள்
நெஞ்சை நிமிர்த்தி வரும்
ஆழக் கடலலையையும்
விஞ்சி விட்ட அமைதி நதியின்
நடுக்கமின்றிய தீண்டல்
பாலைவனப் புழுதியை அள்ளும்
பரவச புயல் வெளிச்சம்
நதிக்கரைகளை மயக்கும்
அடர் வனத்தை இசைக்கும் குறுநதிகள்
ஏரிகளில் முகம் பார்த்து காதல் தழுவும்
உச்சி வெண் மேக நிலவு
அத்தனையையும் ஆரத்தழுவும்
ஒற்றைச் சூரியனின் அகலக் கை
வரவேற்பு கிடைத்த வெற்றியில்
சேற்றோடு செழித்து விழித்துச்சிரித்த
செந்தாமரை மொட்டுக்கள்
அபூர்வப் புற்றரைகளாய்
திறந்திருக்கும் பச்சைத் தோட்டம்
ஏகாந்த இனிமையாகும் உச்சக்கட்ட குளிர்ச்சியில்
முழு உலகின் மொத்தக் குழந்தைகளும்
உச்சி முகரப்படுகின்றன. ....
நெல் வயல்களை முத்தமிடும் போது .......!
மருதமரக் கிளைகளின்
ஊஞ்சல் தாலாட்டு தொட்டுத் தொட்டு
இசைத்துக் கொண்டே இருக்கிறது
அந்த ஆம்பல் பூத்த குளத்து நீரில். .....!
ஓரத்தில் உயிர்ப்போடு கிடந்த
நாணல்கள் நனைத்த கூந்தலை ஈரம் உதிர்த்து
ஏதோ ஒரு தத்துவத்தை
உணர்த்தும். ....
அத்தனையும் சேர்ந்து என் எண்ணத்தை
ஆழக் குளத்தில் மூழ்கி அடங்கும்
அதை தாங்கி நிற்கும்
அணைக்கட்டு மண் கரைந்து உறையும்
ஆழ் குளத்து மண் போல. ........!
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (16-Feb-16, 6:23 am)
பார்வை : 179

மேலே