நகரும் பொழுதுகள்

தெளிவாக இருக்கிறது
வானம்.
தேவையற்ற
நிசப்தங்களைக் கலைக்கும்
முகில்கள் கூட
நீண்ட பயணம்
போயிருக்கலாம்..

அந்திக்கருக்கலில்
செவ்வந்தி நிறத்தில்
சில நட்சத்திரங்கள்
சலனங்கள் ஏதுமிலாமல்
காத்திருக்கின்றன
வரும் இரவுக்காக


சிந்திச் சிதறிய
மின் மினிப் பூச்சிகள்
சிரிக்க மறந்த
வீதி விளக்குகளின்
உறக்கம் கலைக்க..

கரையோடு ஒதுங்கி
மணற்பரப்பில்
ஒளிந்து கிடக்கும்
சிப்பிகளைத் தேடுதலில்
தொலைந்து போகிறது
என் நிமிடங்கள் .

இடையுறாது தழுவும்
இதமான மாலைக் காற்றில்
எங்கோ இருந்து வரும்
பாடல் உதிர்த்து விட்ட
ஒரு துளி இசை..

அது போனதிசையில்
போய்க் கொண்டிருந்தோம்
நீ ..நான் .. நிறம் மாறாவானம்
கூடவே
உடைந்து வீழாத
ஒருதுண்டு பிறைநிலவு..

முகில்களுடன் சொற்கள்
சுமக்கும் கவிதை
மௌனம் கலைத்து
மழைத் துளியாய்
கடற்கரை எங்கும் தூவிச்
செல்ல
ஈராக் கானாவை
ஆவியாக்கிக் கொண்டிருக்கிறது
அந்த அந்திக் கருக்கல்..

எழுதியவர் : சிவநாதன் (18-Feb-16, 11:41 am)
Tanglish : nagarum poluthukal
பார்வை : 206

மேலே