சினிமா ரசனை 35 மொத்தமே 36 கதைகள் கருந்தேள் ராஜேஷ்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜார்ஜ் போல்டி (Georges Polti) என்றொரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் வாழ்ந்தார். அவர் பிறந்தது 1867. பல காலங்களாக மேடையேற்றப்பட்ட நாடகங்கள், புனைவுகள், புத்தகங்கள் என்றால் போல்டிக்கு மிகவும் இஷ்டம். அவற்றைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அப்படிக் கவனிக்கும்போது அந்த நாடகங்களுக்கு இடையே இருக்கும் பல ஒற்றுமைகள் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தன. இவற்றையெல்லாம் குறித்துவைத்துக்கொண்ட அவர் 1895-ல் ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார்.
புத்தகத்தின் பெயர் Thirty Six Dramatic Situations.
அவதானிப்பின் கடவுள்!
அந்தப் புத்தகத்தில் முப்பத்தாறு ‘ஒன் லைன்’களை அவர் எழுதி, ஒவ்வொன்றையும் விவரித்து ஒவ்வொரு அத்தியாயம் எழுதியிருந்தார். அவரது கருத்துப்படி, உலகில் எந்த நாவல், எந்த நாடகமாக இருந்தாலும் சரி இந்த முப்பத்தாறு சூழ்நிலைகளில் ஒன்றை வைத்துத்தான் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதியிருந்தாலும் அப்படியே. ஏனெனில், கணக்கிலடங்காத புத்தகங்களை அவர் தேடித்தேடிப் படித்து வைத்திருந்தார். அவற்றையெல்லாம் மிக விரிவாக ஆய்வு செய்தே இந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருந்தார். எனவே அவரது புத்தகம் புகழடைந்தது. அவர் எழுதிய காலத்தில் சினிமா இல்லை. நாடகங்கள் மற்றும் நாவல்களையே இந்த முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் பொருத்திப் பார்த்தனர்.
திரைப்படக் கலை தோன்றிய பின்னரும் போல்டியின் கணிப்பு தப்பவில்லை. திரைப்படங்களின் ஒருவரிக்கதைகள் இவரது முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் கச்சிதமாக வந்து பொருந்தின. ஆக போல்டியை அவதானிப்பின் கடவுள் என்று வருணித்தாலும் தவறில்லை.
சாகுந்தலமும் அடக்கம்
தனது புத்தகத்தின் முன்னுரையில் அவரது இந்தக் கணக்கைப் பற்றி போல்டியே பெருமிதமாகவும் நம்பிக்கையுடனும் இவ்வாறு எழுதியிருக்கிறார். அவரது புத்தகத்தில் காளிதாசரைப் பற்றிய மேற்கோள் கூட இருக்கிறது. காளிதாசரின் ‘சாகுந்தலம்’ என்ற நாடகத்தின் ‘ஒன் லைன்’ பற்றி இவ்வாறு சொல்கிறார் போல்டி: ‘அம்னீஷியா’. அதாவது, நமது அன்பிற்குரியவர்களை அம்னீஷியாவின் மூலம் இழப்பது. இதுதான் சாகுந்தலத்தின் ஒன்லைன்.
இப்படி எல்லா நாடகங்கள், நாவல்களின் கதைக்கருவையும் கட்டுடைத்தார் போல்டி. இவரது முப்பத்தாறு ஒன் லைன்களைப் படித்தாலே அவற்றில் ஒன்றையோ பலதையோ இணைத்து அவசியம் ஒரு திரைக்கதை எழுதிவிடலாம். முப்பத்தாறு ‘ஒன்’லைன்கள் என்றதும், ஒவ்வொன்றும் ஒரு வரியில் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஆச்சரியத்துக்கு உள்ளாவீர்கள். ஏனெனில், அவரது புத்தகத்தில், இந்த ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏராளமான குட்டிக்குட்டி உதாரணங்கள், பல கிளைப்பிரிவுகள் என்றெல்லாம் மிகவும் விவரமாக எழுதிவைத்துச் சென்றிருக்கிறார் போல்டி. எனவே இவை குழப்பம் இல்லாமல், படிப்பதற்கு எளிதில் புரியும் வகையிலும் இருக்கின்றன. ஒரு சிறிய உதாரணமாக, ஒரே ஒரு கதைச் சூழலை நாம் எடுத்துக்கொள்வோம்.
Situation: Deliverance விடுவித்தல் (அல்லது) காப்பாற்றுதல்
இந்த சிச்சுவேஷனுக்கு நமக்குத் தேவையானவை மூன்று கதாபாத்திரங்கள்.
கதாபாத்திரம் 1: வில்லன். கதாபாத்திரம் 2: பாதிக்கப்பட்ட அப்பாவி. வில்லனால் மிரட்டப்படுபவர். கதாபாத்திரம் 3: அப்பாவியை வில்லனிடமிருந்து காப்பாற்றும் நபர்
யாராவது பாதிக்கப்பட்டவுடன் தானாகவே ஹீரோ வந்து குதித்து, வில்லனை அடிப் பின்னியெடுத்து அப்பாவியை விடுவிப்பது பற்றி இதில் சொல்லப்படுகிறது.
இதற்கு உதாரணம் தேவையா? பழைய படங்களில் எம்.ஜி.ஆர். இந்த சிச்சுவேஷனில் பின்னிப் பெடலெடுத்ததை நாம் எத்தனை முறை பார்த்திருக்கிறோம்? குறிப்பாக, ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதில் காப்பாற்றுதல் என்ற சட்டகம் அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும். ‘எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா?’ என்று பண்டரிபாய் வசனம் பேசும்போது காட்சி கட் ஆகி, “நான் இருக்கேன். பயப்படாதீங்க” என்று ஹீரோ எம்.ஜி.ஆர். வீராவேசமாகச் சொல்லிவிட்டு சண்டையிடும் காட்சி வரும்.
இந்த சூழ்நிலை மொத்தம் இரண்டு வகைப்படும்.
A. தண்டிக்கப்பட்ட அப்பாவியைக் காப்பாற்ற யாராவது தோன்றுதல். தண்டனை கொடுத்தல் என்பது இங்கே சட்டப்படி தண்டனை கொடுத்தல் (மட்டும்) அல்ல. வில்லனால் எங்காவது ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணை ஹீரோ வந்து தானாகவே காப்பாற்றுவது இந்தப் பிரிவின் கீழ் வருகிறது. இதேபோல் சிறையிலிருக்கும் அப்பாவியை ஒரு வக்கீல் தானாகவே முன்வந்து வாதாடி விடுவிப்பது (To kill a mockingbird), எதிரி நாட்டுச் சிறையில் இருக்கும் ஒற்றனைக் காப்பாற்றுவது (இணைந்த கைகள்) போன்ற ஒன் லைன்களை இந்தச் சூழ்நிலையிலிருந்து டெவலப் செய்யமுடியும்.
B (1) பதவியிழந்த தந்தையையோ தாயையோ மறுபடியும் அதே பதவியில் அவர்களின் பிள்ளைகள் அமரவைப்பது
B(2) முன்னர் செய்த உதவிக்குக் கைமாறாகவோ அல்லது பணத்துக்காகவோ நண்பர்களோ அல்லது அந்நியர்களோ ஒரு கதாபாத்திரத்தைக் காப்பாற்றுவது. Chivalry என்ற ஒரு பதம் உண்டு. பண்டையகாலத்தில் வாழ்ந்த வீரர்களுக்கு இது ஒரு இன்றியமையாத பண்பு. வீரம், பணிவு, பரிவு, கருணை, கௌரவம் போன்ற பண்புகளின் கலவையே chivalry. இந்தப் பதத்தையே இந்த இரண்டாவது சிச்சுவேஷனான Deliverance என்பதற்கு உதாரணமாக போல்டி தருகிறார். அதாவது, கதாநாயகன் இப்படிப்பட்டவனாக இருப்பான். அவனது நற்பண்புகளால் தானாகவே சென்று ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பான்.
இது ஒரு உதாரணம். இதைப்போல் இன்னும் 35 சிச்சுவேஷன்கள், ஒவ்வொன்றாக, மிக விரிவாக போல்டியால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தமிழில் எனது வலைத்தளத்திலும் விரிவாக ‘மொத்தக் கதைகள் 36’ என்ற பெயரில் எழுதியிருக்கிறேன். தமிழ் மட்டுமல்லாமல், உலகத்தில் எந்த நாட்டிலும் வணிகப்படங்களை இப்புத்தகத்தின் உதவியால் எழுத முடியும் என்பதே போல்டியின் பலம்.
திரைக்கதை எழுத உதவும் பல புத்தகங்களில் இதுவும் ஒன்று. திரைக்கதை எழுத விருப்பப்படுபவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.
போல்டிக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அரிஸ்டாட்டில், அவரது காலத்தில் இருந்த நாடகங்களைக் கவனித்து, அவரது Poetics என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் அவற்றின் பொதுத்தன்மைகளை எழுதியிருக்கிறார். இப்போது திரைக்கதையில் மிகப் பிரபலமாக இருக்கும் மூன்று அங்கக் கட்டமைப்பு (Three Act Structure) என்பதை நாடகங்கள் வாயிலாக உலகுக்கு முதன்முறையாக அறிவித்தது அரிஸ்டாட்டிலே. அந்த வகையில் திரைக்கதை அமைப்புக்கு அவரே தந்தை.