அச்சேறாத கவிதைகள்

மழலை செய்த கப்பலாய்
மழைக் கடலில் தவழ்ந்து
மகிழ்ச்சியை வணிகம் கொண்டிருந்தது
சில காகிதங்கள்...

முகச் சவரக் கடைகளின் முன் தொங்கும் கம்பிகளில்
அடுக்கி குத்தப் பட்டிருந்தது
சில காகிதங்கள்...

சாலையோரம் தாள் பொறுக்கும்
ஏழைச் சிறுமியின் தோள்களில்
கொஞ்சம் கணம் கூட்டியிருந்தது
சில காகிதங்கள்...

அங்காடி ஊழியர்களால் அவசர கதிகளில்
அரிசி பருப்பை பொதிந்து கொண்டிருந்தது
சில காகிதங்கள்...

இன்றைய நிகழ்வுகள் நாளைய செய்தியாக
நாளிதழாய் உருமாற
அரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது
சில காகிதங்கள்...

வாலறுந்த பட்டமாய்
வான் துரத்தும் காற்றினில்
எல்லைத் தாண்டி பறந்து கொண்டிருந்தது
சில காகிதங்கள்..

பறவைகள் எச்சம் பட்ட
பாதசாரிகளின் முனங்களில்
துடைத்து எரியப்பட்டுக் கொண்டிருந்தது
சில காகிதங்கள்...

இப்படிதான்
அகிலமும் அலைந்து கொண்டிருக்கிறது
அச்சேறாத என் கவிதைகள் நிறைந்த
அந்த சில காகிதங்கள்

எழுதியவர் : மணி அமரன் (24-Feb-16, 10:13 pm)
பார்வை : 78

மேலே