பனை மரக் காடே பறவைகள் கூடே

ஊருக்கு நடுவேயிருந்த பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா என்னப்பத்தா...?

நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...?

முன்னால் நடந்து கொண்டிருந்தாள் கிழவி...

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தெரு முழுதும் செம்மண் புழுதி. செருப்புல்லாம நடக்கிறியே அப்பத்தா கால் சுடலையா உனக்கு....? பழகிப்போச்சப்பே...வெரசா வா என்று கையைப் பிடித்து அழைத்து நடந்தாள் அப்பத்தா.

ஏம்பத்தா இதென்னப்பத்தா இம்புட்டு மேடா இருந்துச்சு இது மேல ஏத்திக் கொண்டு வந்து என்ன நிப்பாடி வச்சிருக்க ஒரே குப்பையா முள்ளுச் செடியா மண்டிக்கிடக்கு உள்ள இது என்னப்பத்தா...?

கண்டாங்கி சீலைக்குள்ளிருந்து அதிரசத்தைக் எடுத்து கொடுத்தபடியே அப்பத்தா சொன்னாள்...

இதாப்பு நம்மூரு கம்மா...மல பேஞ்சு முன்னாடி தண்ணி நிறைஞ்சு தெப்பமா கிடக்கும் இதுலதேன் எல்லா பொழப்பு தலைப்பும் நமக்கு...

மருதையில் ஆப்பரசேன் பண்னி போட்ட தடித்த கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு மறுபடி போட்டுக் கொண்டாள் அப்பத்தா, கண்ணாடியை கழட்டிய போது வேறு யாரோ மாதிரி இருந்தாள், கண்கள் சுருங்கி மூக்கின் மேல் அழுத்தமாய் கண்ணாடியின் தடத்தோடு...

கம்மாக் கரையிலிருந்து இறங்கி நடந்தார்கள் அவர்கள்...

என்னப்பத்தா கருப்பு கருப்பா குட்டி குட்டி மரமா இருக்கே என்னப்பத்தா இதெல்லாம்..?

அங்க எல்லாம் பனைமரங்க இருந்துச்சப்பு முன்னாடி .... இந்தா நீ பாக்குறாயில்ல இந்த இடம் பூர பனை மரந்தேன்...இருந்துச்சு முன்னாடி. இப்ப.... வீடு கட்றதுக்கு பனங்கை வேணும்னு ஆளாளுகுக் வெட்டி வித்துப்புட்டாய்ங்கப்பா...

ஒரே கல்லா நட்டு வச்சி இருக்காங்க...இதென்னப்பத்தா..? தரிசு காட்டை காட்டி அடுத்த கேள்வியைக் கேட்டான் பேரன்...

இதான்ப்பு வயலு, அந்த கம்மாத் தண்ணிய பாச்சி இதுலதேன் விவசாயம் செய்வாக மொதவெல்லாம்..? அதுல ப்ளாட்டுக் கல்லு நட்டு வச்சிருக்ககப்பே..

ஓ.. ப்ளாட் கல்லா....சரிப்பத்தா என்றபடி மெளனமாய் கொஞ்ச நேரம் நடந்த பேரன் சடாரென்று கேட்டான் ....வெவசாயம்னா என்னப்பத்தா?

சோறு சாப்டுறீல்ல.. நீய்யி...?

இல்லப்பத்தா நான் பிட்சா, பர்கர், நூடுல்ஸ், கேஎஃப்சி, கெலாக்ஸ், ஓட்ஸ், பாஸ்தா தான் எப்பவும் சாப்டுவேன்.. எப்பவாச்சும் அம்மா சோறு செய்வா....?

ஏப்பு நீ சொன்னதெல்லாம் திங்கிற சாமங்களா? அப்பத்தா ஆச்சர்யமாய் கேட்டாள்?

ஆமாம்ப்த்தா...

அந்த கட்டக் கடைசியா சோறுன்னு சொன்னீல்ல அதை இங்கதேன் வெளைய வைப்போம்...அப்பத்தா சொன்னாள்...

ஏம்பத்தா அப்போ பர்கர், பிட்சா எல்லாம் எங்கப்பத்தா வெளைய வைப்பாங்க..?

ஒங்கூர்லயா இருக்கும்....வரண்ட தொண்டையில் சொல்லி விட்டு வெளுத்த வானத்தைப் பார்த்தாள் அப்பத்தா...

அப்பத்தா முன்னால் நடந்து கொண்டிருந்தாள்..

பின்னால் செருப்புச் சத்தத்தோடு பேரன் நடந்து கொண்டிருந்தான்.

ஊரைச் சுத்தி பாத்தியாப்பே...? அப்பத்தா கேட்டாள்.

பாத்த்தேன்னப்பத்தா... ஆனா....ஏம்பத்தா ஊர்ல யாரையும் வெளியிலயே காணாம்...வீடுக மட்டுந்தான் இருக்கு.. ஆளுகளயே காணோம்..?

எல்லாரும் பொழப்பு தலைப்புக்காக வெளியூரு போய்ட்டாகப்பே...என்ன மாதிரி கிழம் கட்டைக வீட்டுக்கு ஒண்ணு இரண்டு இங்கன இருக்குக...?

ஏன் அப்பத்தா நீங்க எல்லாம் மட்டும் இங்க இருக்கீங்க....?

வீட்டு வாசற்படியில் ஏறிக் கொண்டே ...ஒங்கப்பன் வேலை தேடி மெட்டரசுக்கு போயிட்டு காசு சம்பாரிச்சுட்டு திரும்பி வந்துருவமத்தான்னு...சொல்லிட்டுப் போனானப்பு...

அதேன்...

வீட்டையும் காட்டையும் காப்பத்தி வச்சிருக்க இங்கனதான கிடக்குறமப்பே....


தொண்டை அடைத்து வந்த கண்ணீரை முந்தானையில் துடைத்து விட்டு, மூக்கைச் சிந்திப் போட்டு விட்டு லீவுக்கு வந்த பேரனோடு வீட்டிற்குள் சென்றாள் கிழவி...!
தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (28-Feb-16, 12:02 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 218

மேலே