தூரிகை - மீள்பதிவு

................................................................................................................................................................................................

(ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றம் அதிஷ்ட தேவதை ரூபத்தில் வர வேண்டிய அவசியமில்லை)

................................................................................................................................................................................................

நான், சோமசுந்தரம், வயது முப்பது. ஐந்தரை அடி உயரம். மாநிறம், அகன்ற நெற்றியில் ஆறேழு சுருக்கங்கள். திருச்சி சின்னக் கடை தெருவிலுள்ள ராகவலு ஏஜென்சியின் கணக்கு வழக்குகளை கவனிப்பவன். அதாவது செட்டியார் கடையில் கணக்கெழுதுகிற வேலை. என் அப்பா அவர் அப்பாவுக்கு கணக்கெழுதினார். அவர் தாத்தாவுக்கு என் தாத்தா கணக்கெழுதினார். இப்படி பரம்பரையாக ஒரு குடும்பத்துக்கு உழைக்கிற கீழ்தட்டு வர்க்கம் நாங்கள். இப்போது வியாபார விஷயமாக சென்னை போய்விட்டு பஸ்ஸில் திருச்சி சென்று கொண்டிருக்கிறேன்.

இராமநத்ததுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பஸ் நின்று விட்டது. டயர் பஞ்சர். டயர் மாற்றி பஸ் கிளம்பும் வரை எனக்குப் பொறுமையில்லை. அப்படியே பொடி நடையாய் குறுக்கு வழியில் ரயில்வே கேட் தாண்டி பெரம்பலூர் போய் விட்டால் வேண்டிய பஸ் கிடைக்கும். உட்கார்ந்து போகலாம்.

மணி மூன்றுதான் ஆகியிருந்தது. நடுப்பகல் தாண்டி மாலைக்குள் விழும் வெளிர் மஞ்சள் வெயில். இருபுறமும் விட்டு விட்டு வயல்கள். ஆளைத் தூக்கும் காற்று. அவ்வபோது வந்து போகும் வாகனங்கள் தவிர ஆள் அரவம் இல்லை. வரப்போகும் விபரீதம் தெரியாமல் நடக்க ஆரம்பித்தேன்.

சிதிலமடைந்த கோயிலொன்று கண்ணில் பட்டது. முன்புறம் நான்கு கால் மண்டபம். மண்டிய புதரினூடே ஒற்றையடிப் பாதை.

எனக்கு ஒரு பழக்கம். கோயில் இருந்தால், அதுவும் கவனிப்பாறற்று இருந்தால் அங்கு சென்று சூடமேற்றி கும்பிட்டு வருவேன். அப்பாவிடமிருந்து வந்த பழக்கம். சட்டைப் பாக்கெட்டில் எப்போதும் சூடமும் தீப்பெட்டியும் இருக்கும்.

மண்டபத்தை அடைந்தபோது திசைக்கொன்றாக நான்கு மண்டபங்கள் இருந்ததைப் பார்த்தேன். நடுவில் கருவறை; காளி கோயில். நிறைய சிதிலங்கள்; விரிசல்களுக்கிடையே துளிர் விட்டிருந்த ஆலங்கன்றுகள். தூண்களில் ஆளுயர சிற்பங்கள்.

ஒவ்வொரு சிற்பமாக பார்த்துக் கொண்டே வந்தேன். ஆரம்பத்தில் அந்த சிற்பங்கள் எனக்குள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஊன்றிக் கவனித்த போது அந்த சிற்பங்கள் ஒரு செய்தியைச் சொல்லின, மரணம்!

மரணத் தறுவாயில் உடம்பு மேற்கொள்ளும் நிலைகள் சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தன. விழி பிதுங்கி, நாக்கு துருத்தி செதுக்கப்பட்டசிற்பம் தூக்கில் தொங்கி உயிரை விட்ட ஒருவனைக் காட்டியது. தூக்குக் கயிற்றின் தடம் கூட அந்தச் சிலையின் கழுத்தில். ஆனால் தூக்கு மரமோ கயிறோ காட்டப்படவில்லை. கையில் மீனையும் தாமரைக் கொடியையும் பிடித்தபடி மொழுங்கென்று கிடந்த சிற்பம் நீரில் மூழ்கி உடம்பு உப்பி இறந்ததைக் காட்டியது.

இன்னொரு சிற்பம் உறவின்போது மூச்சுத் திணறி பெண் இறப்பதைக் காட்டியது. மேலோட்டமாகப் பார்த்தால் இடுப்புக்கு மேல் புறப்பட்ட இரண்டு உருவங்கள் அருகருகாக செதுக்கப்பட்டது போல் தெரியும். ஓவியம் போல அன்றி சிற்பங்களில் ஆண் பெண் வித்தியாசம் மார்புப் பகுதிகளின் வடிவமைப்பில்தான் புலப்படும். பக்கவாட்டில் செதுக்கப்பட்ட ஆண் பெண் உருவங்கள். ஆணின் கை பெண்ணைத் தழுவியிருந்தது. பெண்ணின் ஒரு பக்க மார்பகம் தெரிந்த நிலையில் மறு பக்கம் மார்புக்கு பதில் ஆணைத் தள்ளும் பாவனையில் கையிருந்தது. பெண் அழுத்தப் படுகிறாள் என்பதை இதை விட ஒரு சிற்பத்தில் எப்படிக் காட்ட முடியும்? பெண்ணின் கழுத்து சாய்ந்து, விழிகள் விரிந்திருக்க, வாய் பிளந்த நிலை. அவள் இரு உதடுகளுக்கு இடையே இருந்த பிளவில் இலைச்சருகுகளை நோண்டியெடுத்தேன். பெண்ணின் இன்னொரு கை துவண்டு விட்டதன் அடையாளமாக தூரமாக ஒதுங்கியிருந்தது. ஆணின் விழிகள் பாதி மூடியிருக்க, நெஞ்சுக்குக் கீழ் பெண்ணின் உடல் பாகமே தெரியாதபடி ஆணின் உருவம். ஆணின் தண்டையணிந்த கால்களில் கெண்டைக்கால் புடைத்திருந்தது. அது போல் யானை மிதித்து இறப்பது, தலை வெட்டுப் பட்டு இறப்பது, பாம்புக்கடி, விஷமருந்தி இறப்பது என அனைத்துமே மரணத்தின் நிலைகள்தான்.

முதன்முதலாக என் தண்டுவடத்தில் சிலீரென்றது! சுடுகாட்டில் சிதை அடுக்கப்பட்டு என் உடல் கிடப்பது போன்றும், அழுகுரல் கேட்பது போலவும் பிரமை. பயத்தையும் மீறி எனக்குள் ஒரு ஆச்சரியம்.

என்னவோ தேர்ந்த கலைஞனைப் போல சிற்பங்களை அணுகுகிறேனே. என் குடும்பத்துப் பெண்கள் மார்கழி கோலத்தைக் கூட ஒழுங்காகப் போடத் தெரியாதவர்கள்!

"அந்த இடத்தை விட்டுப் போய் விடு" என்றது உள்ளுணர்வு. மணி மாலை நான்கு தான். பளபளக்கும் சூரிய வெளிச்சம். என்ன நடந்து விடும்?

உள்ளே நடந்தேன்.

ஆக்ரோஷமான நடனப் பாணி காளி சிலை.எட்டுக் கைகளில் முன் கை அபய முத்திரை காட்ட, வலது வரிசையில் அரக்கனின் தலை. பிறவற்றில் ஆயுதங்கள். தவிர சூலாயுதம், மண்டையோட்டு மாலை, முழங்கைப் பாவாடை, குங்குமத் தீற்றலில் பீடம்.

நான் சூடமேற்றக் குனிந்தேன். அது வரை என் துணிச்சலுக்கு ஆதாரமாய் இருந்த சூரிய வெளிச்சம் சட்டென்று மறைந்தது. கார்த்திகை மாதத்தில் கருமேகம் மூளுவதும், கலைவதும் சகஜம் தானே என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. என் இதயத் துடிப்பு வேகமாகி கைகள் நடுங்கின.

கற்பூர தீபத்தில் ஜொலித்தாள் தேவி. கை கூப்பிய அதே சமயம்... ‘ததங்’ என்றொரு சப்தம். தேவியின் கையிலிருந்த அரக்கனின் தலை அறுந்து விழுந்து உருண்டோடியது. என் தலைக்குள் சுளீரென்ற வலி. கை கால்கள் வெட்டி இழுக்க, மயக்கமானேன்.

உணர்வு வந்தபோது நான்கு மாதங்கள் ஓடி விட்டன. மாடு மேய்க்கும் பெரியவர் என் இருப்பை உணர்த்த, ஐசியுவில் அட்மிட் ஆகி நான்கு மாதங்கள் கோமாவில் கிடந்திருக்கிறேன். தொண்டைக்குள் துவாரமிட்டு செயற்கை சுவாசம். அதிர்ச்சியால் இரத்த அழுத்தம் அதிகமாகி மூளையின் ரத்தக் குழாய் வெடித்து விட்டதாம். உயிர் பிழைத்ததே அதிசயமாம்.

கோமாவை விடக் கொடியது உணர்வு மாத்திரமே வந்த நிலை. பதின்மூன்று மாதங்கள் அப்படிக் கிடந்தேன். முன்பெல்லாம் என் மனைவி நெற்றியில் கடுகளவு சாந்து வைப்பாள். உணர்வு வந்ததும் அவள் நெற்றியில் இருந்த ஒரு ரூபாய் சைஸ் பொட்டைப் பார்த்து நான் புருவம் உயர்த்தியதும், அவள் வெட்கப்பட்டு தலை குனிந்த மறு கணம் தேம்பித் தேம்பி அழுததும் மறக்கக் கூடியதல்ல.

முழு உடம்பும் கட்டையாகிக் கிடக்க யோசிக்க மட்டும் முடிவது நரக வேதனை. உழைத்துச் சம்பாதித்து ஒப்பேற்ற வேண்டிய வயதில் குடும்பத்துக்கு பாரமாய் இருப்பதும், குடும்பம் குட்டிச் சுவராய்ப் போவதை கண் கொண்டு பார்ப்பதும் எதிரிக்கும் நேரக் கூடாது. என் மனைவி மூன்று சின்னஞ்சிறு குழந்தைகளுடன் திண்டாடினாள். என் மகள் யாழினிக்கு அப்போது இரண்டு வயது. மருத்துவ மனையில் என் கண் முன் பாட்டில் மூடியைத் தூக்கி வாய்க்குள் போட்டுக் கொண்டாள். மனைவி வருவதற்குள் மூடி தொண்டைக்குள் சிக்கி, குழந்தை திணறியபோது என்னால் என்ன முடிந்தது? கண்ணீர் வழிந்து காதுக் குழியில் நிரம்பினால் தலை சிலுப்பக்கூட என்னால் முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளவும் அடுத்தவர் உதவி வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக சிறு குழந்தை நடை பயில்வது போல் நடக்கவும் பேசவும் பழகினேன். வலப்பக்கம் செயலிழந்தது. வாய் கோணி சொற்கள் குழறின. உடம்பின் பின்புறம் அகல அகலமாய்ப் படுக்கைப் புண்கள். நெஞ்சு சளி கோர்த்து திடீர் திடீரென்று காய்ச்சல் வரும். சிறிது சுணங்கினாலும் ஐசியுவில் அட்மிட் ஆகிற அளவுக்கு நிலைமை மோசமாகி ஒன்றுக்குப் பத்தாய் செலவிழுத்து விடும். சொந்தங்கள் தூர விலகின. நண்பர்கள் கை விரித்தனர். இது வரை உதவி வந்த செட்டியாரும் ஒரு தொகையை மொத்தமாகக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார். எட்டு மாதங்கள் இந்த நிலை.

பக்கத்தில் தீபா நர்சிங் ஹோமில் வேலை பார்த்து வந்த இளம் டாக்டர் சங்கீதாவுக்கு என் மனைவி பரிச்சயம். தினமும் எனக்கு பிசியோதெரபி கொடுப்பதற்காக டாக்டர் என் வீட்டுக்கு வந்து விடுவார். ஒரு நாளல்ல, இரு நாளல்ல- இரண்டு வருடங்கள்! இலவசமாகச் செய்தார். ஒவ்வொரு அவயவத்துக்கும் அசுரத் தனமான பிசியோதெரபி! எனக்கு வலி உயிர் போகும். நாளடைவில் அவரைப் பார்த்தாலே உடலில் வலி கண்டு விடும். அவரைத் திட்டுவேன்; சபிப்பேன். என் நல்லதுக்கு செய்கிறார் என்பதை அறிய முடியாத விரக்தி. அவரின் அர்ப்பணிப்பு ஆச்சரியப்படுத்த, அவரிடமே காரணம் கேட்டேன். இவர் போன்ற இளம் மருத்துவிக்கு வசதி, அழகு, இளமை என சகலமும் தொலைத்த என்னிடம் என்ன ஈர்ப்பு?

‘‘இது வெறும் ஆயத்த நிலையென்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் இந்தத் துன்பத்துக்கு தகுதியானவரல்ல,’’ (“I think this is only a preparatory phase, because you are not deserved for this suffering”)-
இதுதான் டாக்டர் சங்கீதாவின் பதில்.

அன்றொரு நாள் சங்கீதா வந்தபோது பல வகை பெயிண்ட், பிரஷ், பேப்பர் என்று வாங்கி வந்திருந்தார். என் கை விரல்களுக்குப் போதுமான பயிற்சி கிடைப்பதில்லை என்றும் அதனால் நான் தூரிகை பிடித்து வரைய வேண்டும் என்றும் கூறினார்.


இப்போது இன்னொரு அறிமுகக் கதை.

இசை, இலக்கியம், நுண்கலை இவற்றுக்காக வழங்கப்படுவது கீதாஞ்சலி அவார்ட்; இம்முறை நுண்கலைப் பிரிவில் அதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டது இந்த காளி மாதா ஓவியம். இரத்த சிவப்புத் திலகமணிந்து அகண்ட சாந்தம் தவழும் கண்களுடன் தேவி. மூக்கு வரையப்படவில்லை, புல்லாக்கு இருந்தது. வாயில்லை, நெருப்புத் துண்டம் போல நாக்கு. முன்னிரு கைகள் வரம் கொடுத்து பயம் தெளிவித்தால் மற்றவை சக்கரத்தின் ஆரத்தைப் போல புறப்பட்டன. வலது முதல் கையில் அரக்கனின் தலை. முகத்துக்கு கீழ் உடம்பு இல்லை, வண்ணங்கள் தாம். தலையிலிருந்து புறப்படும் கூந்தலின் வளைவு நெளிவு, மார்பில் மாலையாக அணிந்த நாகத்தின் உடலின் மேடு பள்ளம் – இவற்றை வைத்து வரையப்படாத பாகங்களை யூகிக்க முடியும். கணக்கெடுத்து தெரிந்தும் தெரியாமலும் வரையப் பட்ட இரண்டு முழங்கைகள் அவள் முழங்கைப்பாவாடை அணிந்திருப்பதை தெரிவிக்கும். தெளிவான பாதங்கள்; ஒரு பாதம் தாமரை மலரில் ஊன்றியிருக்க, இன்னொரு கால் நடன பாணியில் மடிந்து பாதம் வயிற்றுக்குக் கீழிருக்கும். தேர்ந்தெடுத்த வண்ணங்கள் காளியின் உக்கிரத்தை மாற்றின. சிவப்புத் திலகத்தை ஒரு நிமிடம் பார்த்து விட்டு வெள்ளைச்சுவரை பார்த்தால் அங்கு காளியின் உருவம் தெரியும்.

இந்த ஓவியத்தை வரைந்தது நான். நான்...? சோமசுந்தரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு கணக்கு எழுதிக் கொண்டிருந்த அதே சோமசுந்தரம்..! இந்த ஓவியத்துக்குத்தான் கீதாஞ்சலி அவார்ட் கிடைத்திருக்கிறது. அந்த நிமிடம்- என் வாழ்வின் உன்னதத் தருணம்.

என் வயது ஐம்பத்தைந்து என்றாலும் என் தோற்றம் எழுபத்தைந்து வயது போல் இருக்கும். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் உடம்பில் பாரிச வாயு வந்து தேறியதன் மிச்சமாக லேசாக கோணிய வாயும், குழறிய பேச்சும், முடங்கிய வலது காலுமாக இருந்தேன். மூத்த மகன் அகிலேஷ்; வக்கீல், மனைவியுடன் டெல்லியில் வாசம். அடுத்தது அபிநந்த். ஓவியங்களை சந்தைப் படுத்தும் பிசினஸ்மேன். ஒரு மகள்- யாழினி; ஓவியக் கல்லூரியில் பயின்றவள். என் தொழில் முறை வாரிசு.

இது தவிர நான் சங்கீதா அகாடமியின் நிறுவனர். ஒரு ஓவியக் கல்லூரியும், மூளை பாதித்தவர்களுக்கு மறு வாழ்வு மையமும் நடத்துகிறேன்.

ஓவியங்களின் விற்பனை கோடிக்கணக்கில். சொகுசான பங்களா, ஃபெராரி கார், நகை நட்டுடன் மனைவி- ஆம், இப்போதும் பெரிய பொட்டுதான்.

முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேனே. என் இரண்டாவது மருமகள் டாக்டர் பத்மினி, டாக்டர் சங்கீதாவின் மகள்.


................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Feb-16, 6:05 pm)
பார்வை : 216

மேலே