காத்திருப்பு
நீ நிதமும் வருகிறாய்
என்னைத் தேடி..
வந்தும் வராததுமாய்
என் கரங்களில் தவழுகிறாய் !
நீ பேசியதையே பேசினாலும்
நித்தம் புது வண்ணங்கள்
குழைத்து சுவையேற்றி
என் காலை நேரத்தை
கவர்ந்து கொள்கிறாய் !
போதுமென்று உன்னை
நான் புறக்கணித்துப்
போனபிறகும் மின்விசிறியின்
கீழ் நீ படபடத்துக் கிடப்பது
அழகாய்த்தான் இருக்கிறது !
எனக்குத் தெரியும் -
நாளை நீ மீண்டும்
வரும்போதும்
இதே கதைதான்
அரங்கேறப் போகிறது !
இருப்பினும் -
காலைநேரத்தில் உன்னை
எதிர்பார்த்துக் காத்திருப்பது
ஒரு தனி இன்பம்தான்
எனது செய்தித்தாளே !