பொத்தி வைக்கும் மாமன்கள்தானே நாம்

அவள் பலவீனமானவள் அல்ல
ஒரு வாழ்வில் இரு ஜென்மம் வாழும்
வாய்ப்பு பெற்றவள்...

கணவனை,
பிள்ளைகளை, பெற்றோரை,
புகுந்த வீட்டை.....
இன்னும் இன்னும் உறவுகளை
சுமக்கும்
மேலாண்மை தெரிந்தவள்...

அவளுக்கு பிடிக்காதவைகளை
எப்போதும் நாம் செய்வதில்லை..
செய்யும் சூழலிலும் சிறுபிள்ளையாகி
சிரிக்க வைத்து விடுகிறோம்.....

அவள் சிறகுகளுக்கு இன்னும்
இரண்டு இறகு சேர்த்து தானே
ரசிக்கிறோம்...

அவளை ஒருபோதும்
அடிக்காத கைகளில் தானே
அவள் பெரும்பாலும்
உறங்குகிறாள்...

அவள் கனவுகளுக்கு
வண்ணம் சேர்க்கும்
ஓவியங்களையே நாம்
படைக்கின்றோம்....

அவள் வானத்தில் நட்சத்திரம்
பதிக்கிறோம்..அவள் நிலவில்
மூச்சு நிரப்புகிறோம்...அவள் இரவில்
வெளிச்சம் பாய்ச்சுகிறோம்... அவள்
பாடல்களை முணுமுணுக்கிறோம்....
அவள் தெய்வத்தைக் கூட
கொண்டாடித்தான் திரிகிறோம்...

அவள் அசைத்த அணுவில்தானே
நம் பிள்ளைகள் பிறக்கிறார்கள்...

மனதை, மார்பை, மற்றவைகளையும்
மகிழ்வோடுதானே தருகிறாள்...
மடி சாய்ந்து கிடப்பதில் தானே
மானுடம் செழிக்கிறது...

அவள் இதயத்தைக் கூட
'துடிக்க' விடக் கூடாத
காதலுக்குள் அவளை இன்னும்
பொத்தி வைக்கும் மாமன்கள்தானே
நாம்......

அவள் பெயரில் பாதியைத்தானே
நான் வைத்திருக்கிறேன்...
வைத்திருப்போர் நிறைய உண்டு...
பச்சை குத்தி போற்றுவோர் ஏராளம்...

மனைவி வீட்டில் இல்லாத
முதல் நாள் நண்பனுக்கு
இரண்டாம் நாளும் நண்பனுக்கே
மூன்றாம் நாள் வெறுமைக்கு....
நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்...

நாம் அவளை நம்மிடமிருந்து
ஒருபோதும் பிரிப்பதேயில்லை...
மனைவியை அம்மா என
அழைக்கும் கணவன்கள்தானே
இங்கு அதிகம்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Mar-16, 1:52 pm)
பார்வை : 79

மேலே