சலவை
ஒவ்வொரு தேர்தலிலும்
நாம் தான் தோற்றுக்கொண்டிருக்கிறோம்
அவர்களில் ஒருவர்
வெற்றி பெறுகிறார்
வாக்களித்து
வாக்குக் கேட்டார்கள்
நாம் வாக்களித்தோம்.
வென்ற பிறகு
அவர்கள் வாக்கும் பொய்த்தது
போக்கும் பொய்த்தது
வளம்,முன்னேற்றம்
மாற்றம் என்ற வார்த்தைகள்
நமக்கானது என்று
நம்பிக்கொண்டிருந்தோம்.
நம்பிக்கொண்டிருக்கிறோம்.
அவர் செய்யவில்லையா தவறு?
இவர் செய்யவில்லையா தவறு?
ஒருவரையொருவர்
கேட்டுக்கொண்டிருப்பதை
கேனத்தனமாக
நாமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
நாம் முட்டாள்கள் ஆனதை
அறியாமலே
முட்டாள்கள் ஆனோம்.
அவர்கள்
வேட்டி சட்டையை மட்டுமல்ல
நம் மூளையையும் சேர்த்தே
சலவை செய்து விட்டார்கள்.