நாய் கற்பிக்கும் பாடம்
நாய் கற்பிக்கும் பாடம்
நான் இந்த கிராமத்தில் குடியேறி இருபது வருடங்களாக ஒரு பலசரக்குக் கடை
வைத்து ஞாயமான விலையில் தரமான பொருள்களை கிராம மக்களுக்கு வழங்கிக்
கொண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் என் கடையில் உள்ள கரும் பலகையில்
அன்றைய பொருள்களின் விலைவாசி என் கடையில் அந்த பொருளின் விலை
ஆகியவற்றை எழுதி வைத்திருப்பேன். இதனால் மக்களுக்கு நாட்டு நிலவரம் தங்கள்
பொருளாதார நிலைமை ஆகியவை தெரிந்து அவர்கள் தங்கள் தேவைகளை
கட்டுப்பாடோடு வாங்கி செயல் படுவார்கள். என் கடையில் வாங்குவோர் ஒரு
மாதத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும். அதனால் அவர்களில் பலரும் கையில்
இருக்கும் பணத்தைப் பொறுத்து அதற்கான பொருளை வாங்குவர் மாத கடைசியில்
கையில் பணம் இல்லாமல் என்னிடம் வருவதை தவிற்பர். என் கடைக்கு வரும்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து என் கடை இப்பொழுது ஒரு
சூப்பர்மார்கெட் அளவிற்கு பெரிதாகி அந்த கிராமத்தில் மட்டும் இல்லாமல்
பக்கத்துக்கு ஊர்களில் இருந்தும் ஆட்கள் வர ஆரம்பித்தனர். அன்றும் வழக்கம் போல்
காலையில் கடையை திறந்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்து என்
வேலையாட்கள் அவர்கள் தேவைகளை எடுத்து கொடுத்து கொண்டிருந்தனர். நான்
என்னுடைய கல்லா பெட்டி மேஜையில் அமர்ந்து தெருவை பார்த்து
கொண்டிருந்தேன். ஒரு நாய் வாயில் ஒரு பையுடன் வந்தது. நானும் அதைப் பார்த்து
கூப்பிட்டேன்.உடனே அது அந்த பையை என் காலில் வைத்து என்னைப் பார்த்து
வாலை ஆட்டியது. நான் அந்த பையை எடுத்து உள்ளே நோக்கினேன் அதில் ஒரு
பேப்பரில் வேண்டிய பொருள்களும் அதற்கு தேவையான பணமும் இருந்தது.அந்த
நாய் என்னை நோக்கி இரு முறை குலைத்து விட்டு அங்கேயே உட்கார்த்து என்னை
பார்த்தது.நான் அதில் குறிப்பிட்ட பொருள்களை பையில் வைத்து பணத்தை எடுத்து
கொண்டு மிச்சம் உள்ள பணத்தை அதில் வைத்து கீழே வைக்க முன் போல் அது அந்த
பையை வாயில் வைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தது. நான் ஒரு ஆர்வத்துடன் அதை
பின் தொடர்ந்தேன்.அது தெருமுனையில் சென்று பாதசாரிகள் நடக்கும் இடத்தில்
நின்றது.அங்கு நின்றவர்கள் பச்சை விளக்கிற்காக காத்திருந்தனர்.அதுவும் நின்று
எல்லோரும் நடக்க ஆரம்பித்ததும் தானும் நடந்தது.எனக்கு மீண்டும் ஒரு
ஆச்சர்யம்.அடுத்தாக அது அடுத்த தெரு முனையில் திரும்பி ஒரு வீட்டின் வாயிலில்
உள்ள கேட்டைத் தனது மூக்கினால் திறந்து பின்னர் முன் கதவின் தாழ்ப்பாளை தனது
மூக்கினால் இருமுறை தட்டி ஒலி எழுப்பிட அதை ஒரு பெரியவர் திறந்தார். அந்த
பெரியவர் அதன் வாயில் உள்ள பையை வாங்கி அதில் உள்ள பொருள்களையும்
பணத்தையும் எடுத்த பின் அதைத் தனது கைகளால் தட்டி விட்டு உரத்த குரலில்
உன்னை யார் சாவியை மறந்து விட்டு போக சொன்னது என்னை எழுப்பாமல் நீ
வந்திருக்கலாம் இல்லையா என்று கூறி அதை அடிப்பதற்கு ஒரு குச்சியை எடுத்தவுடன்
எனக்கு பொறுக்கவில்லை.உடனே நான் ஐயா உங்கள் நாய் எவ்வளவு புத்திசாலி
என்னிடம் வந்து பொருள் வாங்கி ரோட்டில் பச்சை விளக்கிற்கு நின்று பின்னர்
அங்குள்ளவர்கள் நடக்கும் பொழுது நடந்து இங்கு வந்து கேட்டை திறந்து உள்ளே
வந்து கதவை தட்டியதை பார்த்தேன்.பொருள் கீழே விழாமல் உங்களிடம் கொண்டு
வந்து கொடுத்ததே அதற்குப் பாராட்டாமல் அதை அடிக்க போகிறீர்களே என
அவரைத் தடுத்தேன். அவர் அதற்கு என்னை நோக்கி எவ்வளவு தடவை அதற்குச்
சொல்லிக் கொடுத்திருக்கிறேன். சாவியை மறக்காமல் எடுத்து செல்லவேண்டும் என்று
எனக் கூறியவாறே அதனிடம் ஒரு அதட்டல் போட்டார்.அது உடனே தன் கைகளால்
கண்ணை மூடி கொண்டு அங்கேயே படுத்து கொண்டது. அதைப் பார்த்து என்
உள்ளம் மிக வேதனை அடைந்தது.தன்னை தான் பெரியவர் திட்டுகிறார் என அதற்கு
தெரிந்து அந்த நாய் தன் முகத்தை மறைத்ததை கண்ட நான் அதன் அறிவையும்
பண்பையும் கண்டு வியந்தேன். நான் அங்கு இருந்ததால் அவர் அதை அடிக்கவில்லை
என நினைத்து மகிழ்ச்சி அடைத்தேன். என் மனதில் உடனே வந்த சிந்தனைகள் நாம்
வேலை செய்யும் இடங்களை பற்றியது தான்.நம்முடைய மேல் அதிகாரிகள் நாம்
எவ்வளவு நன்றாக உழைத்தாலும் ஏதாவது ஒரு சிறிய தவறை பெரிதாக பேசி
அதையே சொல்லிச் சொல்லி நாம் செய்த நல்லவற்றை பாராட்டாமல் எப்பொழுதும்
நம்மை ஒரு நிம்மதி இல்லாமல் விரக்தி அடைய செய்து செய்யும் தொழிலையே
வெறுக்கவைப்பதை நினைத்து அந்த நாயின் மனநிலையையும்
அவ்வாறே இருக்கும் என்று யூகித்தேன்.நாம் நம் மனநிலையை மற்றவரிடம் பகிர்ந்தும்
வாயில் சில சொற்களால் பேசியும் நம்மை சமாதானம் செய்து கொள்ளலாம்,இந்த
நன்றியுள்ள ஜீவனோ பேசமுடியாமல் கண்ணை மூடி படுத்து கொண்டு தான் தன்னை
சங்கடத்தில் இருந்து காத்து கொள்ளும் என நினைத்தவாறு அங்கிருந்து மெல்ல நடக்க
ஆரம்பித்தேன்.அந்த பெரியவர் நாயை கூப்பிட்டு அதன் தட்டில் உணவை வைத்ததும்
அந்த நாய் ஓடி சென்று தனது வாலை ஆட்டி அவரை நக்கி விட்டு சாப்பிட
ஆரம்பித்தது.அதன் மனம் இப்பொழுது அவர் பேசியதை எல்லாம் மறந்துவிட்டது.
நம்மால் இவ்வாறு செய்ய முடிவதில்லை.எப்பொழுதும் மற்றவர் கூறும் சொற்களை
நினைத்து நினைத்து நாம் அவர்களை கண்ட பொழுதெல்லாம் வெறுப்பையும்
கோபத்தையும் வெளிக்காட்டுகிறோம் வெளிக்காட்டுகிறோம். நாயின் மனமும் பண்பும்
நமக்கில்லையே என எண்ணி கடவுளின் இந்த படைப்பைக் கண்டு வியக்காமல்
இருக்க முடியவில்லை.