வேறு நிலாக்கள் 29 ஈழக்கவிஞர் சோலைக்கிளி

நண்பரின்'நான்
********************
உனது‘~நான்|”
ஓங்கி நின்றது
மலையாய்!
தேயிலை நடுவதற்கு
மிகச் சிறந்த இடம்
உனது‘~நான்|”
உல்லாசப் பயணிகள் தங்கி
உனது நானின் அழகை ரசிக்க,
வசதி செய்தால் வருவர்
உனது நானுக்கு
உனது நானில்
ஓர் அருவியும் ஓடினால் மிக அழகாக இருக்குமே
நண்ப!
மிகக் குளிர்ப் பிரதேசமாக உன் நான் இருக்கட்டும்.
மேகங்கள் உன் நானில்
இனி தவழ்ந்து விளையாடட்டும்.
பனிக் குருவிகள், ,
ஆமாம்: கண் கறுத்த சிவந்த
பனிக் குருவிகள்,
உன் நானில்
கூடுகட்டியும், கூடியும் புணர்ந்தும்
கத்தித் திரியட்டும் நான் ரசிக்க
நண்ப,
உனது நானில்
சிலர்
வீடுகட்ட வருவார்கள்.
மிகவும் அடிவாரத்தில் கட்டிக்கொள்ள வைக்காதே,
அவர்களை,
உனது நான் சரிந்தால்
அவர்கள்
அழிவர் இல்லையா!
***
பின் குறிப்பு :
கவிஞர் சோலைக்கிளி ஈழப் புதுக்கவிதை முன்னோடிகளில் குறிப்பிடத்தகுந்தவர்.
'இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ' நூலில் அவர் கவிதைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
"நண்பரின் நான் " ஈழப்புதுக்கவிதையின் குளிர்ச்சியாக புதுமை செய்த கவிதை )