துளிப்பாக்கள் _ குமரேசன் கிருஷ்ணன்

மரத்தை ரசிக்கும் நொடியில் 
மனதுள் நுழைகிறது 
கிளையில் வந்தமர்ந்தப் பறவை. 

©©©©©©©©©©©©©©©©©©©©©©

பல்லியின் பிடியிலிருந்து 
தப்பித்துவிடுகிறது 
தும்பியின் இறகு மட்டும். 

©©©©©©©©©©©©©©©©©©©©©©

காற்றின் வரவிற்காய் 
தவமிருக்கிறது 
அலைபாயும் மனம்.

©©©©©©©©©©©©©©©©©©©©©©

வெறுமையாய் இருந்த மனதுள் 
தூவானமிட்டது 
இறகு உலர்த்தும் நாரையொன்று.

©©©©©©©©©©©©©©©©©©©©©©

நிலவு வராத நேரத்தில் 
பறவைகளை ரசித்தபடியே 
உண்கின்றன குழந்தைகள்.

©©©©©©©©©©©©©©©©©©©©©©

கரையும் காகத்திடம் 
யார் உரைப்பர் 
நான் வீடு மாறியதை.

©©©©©©©©©©©©©©©©©©©©©©

அந்தி மஞ்சள் 
ஞாபகமூட்டுகிறது 
அவள் வெட்கத்தை.

©©©©©©©©©©©©©©©©©©©©©©

தங்கத்தில் கடவுள் 
தங்க இடமின்றி 
ஏழைப்பக்தன். 

©©©©©©©©©©©©©©©©©©©©©©

கோமணத்தை இறுக்கிக்கொள் 
கலர்க்கலராய் வருகிறது 
கரைவேட்டிகள். 

©©©©©©©©©©©©©©©©©©©©©©

சன்னலோரக் காட்சியை 
ஓவியமாக்குகிறது
உணவுக் கொறிக்கும் அணில். 

©©©©©©©©©©©©©©©©©©©©©©

கோயில் சென்று திரும்புகையில் 
கூடவே வருகின்றன
அம்மாவின் ஞாபகம். 

©©©©©©©©©©©©©©©©©©©©©©

குமரேசன் கிருஷ்ணன்.

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (9-Mar-16, 2:35 pm)
பார்வை : 293

மேலே