மொண்ணைகள்
எல்லாம் சரிஎன்று
சகித்துப் போகிறார்கள்.
சகித்துப் போகச் சொல்கிறார்கள்
எல்லாரும் சும்மா இருக்கும்போது
நமக்கேன் வம்பு என்று
எல்லார் வீட்டிலும் அடக்குகிறார்கள்.
துட்டனைக் கண்டால்
தூர விலகென்று
பழமொழி வேறு.
வம்பை விலைக்கு வாங்காதே என்று
வம்பு செய்கிறவர்களிடமிருந்து
விலகிப் போகச் சொல்கிறார்கள்.
மொண்ணையாய் இருப்பவன்
நல்லவன் என்று
முடிவு கட்டுகிறார்கள்.
எவனோ ஒருவன்
எதிர்க்கிற போது
கைதட்டி, ஆரவரிக்கிறார்கள்
கைதட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.
அவனும் தோற்றால்
அவனை வெல்ல முடியுமா? என்று
கலைகிறார்கள்.