சிறுவர் கதை - இரு அணில்கள்

அடர்ந்து பெரிதாய் வளர்ந்த மரங்கள் இரண்டு சற்று அருகருகே இருக்க, அவ்விரு மரங்களின் பொந்துகளில் இரண்டு அணில் குடும்பங்கள் தங்கள் குட்டி அணில்களுடன் வாழ்ந்து வந்தன. எப்பொழுதும் இரண்டு குட்டி அணில்களும் சேர்ந்து ஓடுவதும் விளையாடுவதுமாக பகல் பொழுதைக்கழித்து விட்டு மாலையில் அதனதன் மரப்பொந்துகளுக்குத்திரும்பி விடுவது வழக்கம். ஒரு மரத்தின் நீண்ட கிளை இரண்டாவது மரத்தை தொட்டபடி இருக்கும், அதுவே குட்டி அணில்களுக்கு பாலமாக ஒரு மரத்திலிருந்து இரண்டாவது மரத்திற்கு தரையைத்தொடாமல் செல்ல உதவியது. தரை வழியே செல்வது ஆபத்தானது என்பதால் இந்தக்கிளை பேருதவியாக இருந்தது.
ஒரு நாள் மாலைப்பொழுதில் வழக்கம்போல் இரண்டும் விளையாடிக் கொண்டிருக்க, பலத்த மழை பெய்யத்தொடங்கியது. அதனால் இரண்டும் தங்களின் மரப்பொந்துகளுக்கு விரைந்து திரும்பின. பலத்த காற்றுடன் பெய்த மழை இடி மின்னலுடன் இரவும் தொடர்ந்தது. நடு இரவில் மரமே பெயர்ந்து விழுவது போல் பெரிய இடி ஒன்று விழுந்தது. பின் மெதுவாக அனைத்தும் ஓய்ந்து அமைதியானது.
மறு நாள் வெளியே வந்த அணில் குட்டிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி, இரு மரங்களுக்கும் பாலமாக இருந்து உதவிய அந்த நீண்ட கிளை, முன் தினம் பெய்த மழையில் முழுவதுமாக முறிந்து விழுந்திருந்தது. இனி இரு அணில் குட்டிகளும் சந்திக்க ஒரே வழி தரை வழியாக செல்வதே. ஆனால் அது சற்று ஆபத்தானது என்பதால் இரண்டும் அஞ்சி அதனதன் மரங்களிலேயே இருந்துவிட, தொலைவிலிருந்து பார்த்துக்கொள்வதைத்தவிர அவற்றால் சேர்ந்து விளையாடவோ, பேசவோ முடியாமல் போனது. சில நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஆனால் பொறுமையிழந்த இரண்டும் ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக தரை வழியாக இறங்கி சந்தித்துக்கொண்டன. பின் மீண்டும் மெதுவாக மரம் விட்டு மரம் சென்று பழையபடி இரண்டும் விளையாடத்தொடங்கியது.
இது சில நாட்கள் தொடர்ந்த நிலையில், ஒரு காலைப்பொழுதில் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம் போல் தரை வழியே இறங்க முற்பட்ட இரண்டு அணில் குட்டிகளும் பயத்தில் அப்படியே நின்றது. தரையில் இரண்டு பெரிய முதலைகள் சிறிதும் ஆடாது அசையாது நின்றிருந்தது.
முதலைகள் இரைகளைப்பிடிக்க அசையாமல் மணிக்கணக்கில் சிலை போல் நிற்கும் என்பதைக்கேள்விப்பட்டிருந்த அணில்கள், தரையிறங்காது அதனதன் மரங்களிலேயே காத்திருந்து விட்டு பின் வருத்தத்துடன் தங்கள் பொந்துகளுக்கே திரும்பின. பல மணி நேரங்களுக்குப்பின் வெளியே வந்து பார்த்த போது முதலைகள் அங்கேயே இருந்தது, ஆனால் அணில் குட்டிகள் மகிழ்ச்சியில் குதித்தன. காரணம், இரண்டு முதலைகளுக்கும் இருவர் வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தனர். அந்த இரு மரங்களும் இருப்பது ஒரு பூங்காவில், இரு பெரிய முதலைப்பொம்மைகள் அங்கு வாங்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட அணில் குட்டிகள் அச்சம் நீங்கி மகிழ்ச்சியில் குதித்தன. மீண்டும் தரை வழியே இறங்கி இரண்டும் சந்தித்து விளையாடத் தொடங்கின

எழுதியவர் : PG வெங்கடேஷ் (12-Mar-16, 10:28 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
பார்வை : 521

மேலே