வைத்த மரம் காத்திடுவோம்

மரமே மரமே எந்தன் மரமே
என் பாட்டியோ தாத்தாவோ வைத்த மரமே
வரமே வரமே நீயும் வரமே
உன் நிழலினில் கழிந்த நாட்கள் வரமே

எனக்காய் சுடுவெயில் தாங்கி நின்றாய்
என்மேல் இலைஉதிர்த்து அன்பைச் சொன்னாய்
கணக்காய் உன்பணியை நீயும் செய்தாய்
மண்மேல் வந்தபயன் நாளும் செய்தாய்

மெய்யாய் எனக்காக நிழலும் தந்தாய்
கையாய் எனைத்தழுவி நீயும் நின்றாய்
உன் சுகமான தாலாட்டில் தூங்கியிருந்தேன்
உன் வளமான இசையமைப்பில் லயித்துயிருந்தேன்

உனைவெட்டி வீடுகட்ட குடும்பம் குதிக்குது
எனைவிட்டு போயிடுவேனு மனசும் தவிக்குது
ஈவுஇரக்கம் இல்லாததே மனுச குணம்
தாவும் காலமாற்றத்திற்கேற்ப மனுச மனம்

நீருற்றி உரமூட்டி வளர்த்து விட்டு
கூரான அருவாள் கொண்டு வெட்டலாமா
தேராக வளர்ந்து நீயும் நிற்கும்வேளை
மாறாக உந்தன் வயிற்றில் குத்தலாமா

காலிருந்தா இவ்விடத்தை விட்டே ஓடிவிடு
மனுசனில்லா உலகம்தேடி வாழ்ந்து விடு
நன்றி கெட்ட சென்மம்தானே இந்த மனுசபொறப்பு
நானும் அதுல ஒன்னுதான்னு என்மேலே வெறுப்பு....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Mar-16, 7:31 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 2373

மேலே