ஜோஸ் ரிசாலின் கடைசி கவிதை - மொழி பெயர்ப்பு -2

இப்பிறப்பு வாய்த்திட்ட நாளே
எனக்குள் வந்திட்ட கனவு அது
பதின்ம பருவத்திலும் மிடுக்கான உருவத்தில்
என்னோடு வாழ்ந்திட்ட கனவு அது
ஓரியன்ட் கடலின் ரத்தினங்கள் விரவிய நின் முகம்
கவலை இல்லாமல் கரிசனத்தோடும்,
அவமானத்தின் சுருக்கங்களற்றும்,
கண்களில் நீர் சுரக்காமல் -உன்
மென்புருவங்கள் உயர்ந்திருக்கும்படியும்
உன்னை காண வேண்டுமென்ற கனவு அது

என் வாழ்வின் தீரா வேட்கையின் கனவே!
விடை பெற இருக்கும் என் உயிர்
உன்னை வாழ்த்தி புலம்புகிறது
உனக்காக காலாவதியாவது
எத்தனை இன்பமென்று......
நீண்ட இரவில் மருளியலான உன் மடியில்
முடிவிலா உறக்கம் கொள்வது
எத்தனை உத்தமமென்று .....
உன்னை வாழ்த்தி புலம்புகின்றது

பிறிதொரு நாளில் என் புதைவிடத்தின் மேலே
அடர்ந்த புற்களுக்கிடையில் மலர்ந்திருக்கும்
ஒரு சிறு மலரை நீ காணக்கூடும்
அதை உன் உதடுகளால் வருடி
என் ஆன்மாவை முத்தமிடு
அப்போது ....
குளிர் உறையும் கல்லறைக்குள்ளே
உனது மென்புருவத் தீண்டலையும்
கதகதக்கும் மூச்சுக்காற்றையும்
நான் ஸ்பரிசிப்பேன் .....

-டயானா

குறிப்பு :
ஜோஸ் ரிசால் பிலிப்பைன்ஸ் புரட்சித் தலைவர். மறுநாள் காலையில் மரண தண்டனை என்ற நிலையில் அவர் எழுதிய உணர்வு மிக்க கவிதையை மொழி பெயர்த்துள்ளேன். அந்த கவிதை மொத்தம் 14 பத்திகளைக் கொண்டது. அடுத்தடுத்த பதிவில் மீதமுள்ள பத்திகளின் மொழி பெயர்ப்பை பதிக்க உள்ளேன்.

எழுதியவர் : மேரி டயானா (15-Mar-16, 2:27 pm)
சேர்த்தது : மேரி டயானா
பார்வை : 65

மேலே