கலித்துறை

தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் கலித்துறையும் ஒன்று.
இது பல்வேறு ஓசைகள் உடையது.
5 சீர்கள் உடையது நெடிலடி ஆகும்
நெடிலடிகள் நான்கு கொண்டிருக்கும்.
அவை நான்கும் எதுகை கொண்டிருக்கும்.

சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற படைப்புகளில் இப்பாவினம் மிகுந்து காணப்படுகிறது. கட்டளைக் கலித்துறை இதன் வகைகளில் ஒன்று.

இதில் கலி மண்டிலத் துறை, கலி நிலைத் துறை என இரண்டு வகைகள் உண்டு.

உதாரணம்:

நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே. - சம்பந்தர் தேவாரம், 1058 - கலி நிலைத் துறை

நான்கு அடிகளிலும் ஈற்றுச்சீர் - புளிமாங்காய்

மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும்;
தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்;
தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்;
சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்.- கலிமண்டிலத் துறை

இஃது ஐஞ்சீர் அடியாய், அடிதோறும் பொருள் முடிந்து, அடி மறியாய் வந்ததால் கலி மண்டிலத் துறை எனப்படும். இப்பாடலில் அடிகளை மாற்றிப் போட்டாலும், பொருளில் மாற்றமிருக்காது. எனவே இது அடிமறி கலி மண்டிலத் துறை ஆகும்.

யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்
தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்,
தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே? - கலி நிலைத் துறை

நான்கு அடிகளிலும் ஈற்றுச்சீர் - புளிமாங்காய்
இது அடிமறி ஆகாமல், ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலிநிலைத் துறை எனப்படும்.

கட்டளைக் கலித்துறை:

கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர். காரைக்கால் அம்மையார் தான் இவ்வகையை முதலில் பயன்படுத்தினார் என்பர்.

எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது ஒற்றெழுத்துகள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும்.
அவை செப்பலோசை கொண்டதாக இருக்கும்.
செப்பலோசை என்பது வெண்டளை கொண்ட சீர்ப்பிணைப்புகள்.
ஐந்து சீர்களில் இறுதியில் உள்ள சீர் 'விளங்காய்' வாய்பாடு கொண்டிருக்கும்.
ஏனைய நான்கில் 'விளங்காய்' வாய்பாட்டுச் சீர் வராது.
மா, விளம், காய் வாய்பாட்டில் முடியும் சீர்கள் மட்டுமே வரும்.
பாடல் பொதுவாக 'ஏ' என்னும் எழுத்தில் முடிவது வழக்கம்.

Ref: விக்கிபீடியா

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-16, 10:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 244

மேலே