பாடம் ஒன்று

நவீன
மருத்துவமனை
காத்திருப்புக் கூடத்தின்
செயற்கை அருவியும்
வண்ண மீன் தொட்டியும்
அந்த ஐந்து வயதை
ஈர்க்கவில்லை..

தரையைப் பளிச்சிட
வைத்துக் கொண்டிருக்கும்
துப்புரவு பெண்தொழிலாளியின்
நீலச்சீருடையின் முந்தானையை
மிரட்சியோடு பிடித்துக் கொண்டிருக்கும்
சின்னப் பாப்பாவை நட்புடன்
பார்த்து கையசைத்தது...

கையிலிருந்த
சாக்லேட்டை
சின்ன பாப்பாவுக்கு
கொடுத்து கன்னத்தை வருடிக்
கொண்டிருந்த போதுதான்
தம்பியோ தங்கச்சிப் பாப்பாவோ
சில மாதங்களில் வரப்போவதை
அறிவித்திருந்த மம்மியும் டாடியும்
டாக்டர் அறைக்குள் இருந்து
வெளியே வந்து முறைப்போடு
காரிலேற்றும் முன்
மீதமிருந்த சாக்லேட்டை
வெளியே வீசத் தவறவில்லை..

காருக்குள் வைத்திருந்த
மருத்துவமனை நெடியடிக்கும்
வெண்காகித கைகுட்டையால்
தனது கைகளைத் துடைத்துவிடும்
காரணம் விளங்காமல் விழித்துக்
கொண்டிருந்தது அந்த பிஞ்சு...

எழுதியவர் : ஜி ராஜன் (22-Mar-16, 1:03 pm)
Tanglish : paadam ondru
பார்வை : 73

மேலே