வேறு நிலாக்கள்-32-சுஜய் ரகு

என் கதவுகள்
-------------------
முதன்முதலாக
என் கதவுகளைத் திறக்கிறேன்
என் விசாலங்களை
நானே உணர்ந்தறியாத
தருணமது

"அன்பு"
உள்ளே நுழைகிறது
புத்தம் புதிதாக
அறிமுகமற்றதாக
நான்
நீ யாரெனக் கேட்கவில்லை
தடுக்கவும் முடியவில்லை
அது அன்பின் தனித்துவம்

என் பிஞ்சு விரல் பிடித்து
குளிர் திசைகளுக்குக்
கூட்டிப் போகிறது
வழியெங்கும் "நந்தவனம்"
அன்பின்
பெரு நதியில் நான்
அவ்வளவு பாதுகாப்பாக
மிதக்கிறேன்

**********

பிறகு "ஆசை"வந்தது
தடுத்த என்னைத் தள்ளிக்கொண்டு
அத்துணை உரிமையோடு,
வெட்கத்தைப் பரிசளித்தது
வேண்டாம் எனச் சொல்லும்
இதழ்கள் மீறி
எம் கைகள் தாமாக நீட்டுகின்றன.

ஒரு கட்டத்தில்
அதன் உரிமை
எல்லைமீறிப் போகிறது
சீரிய நாதங்களில் பிரம்படி
ஓசை கேட்க
நான் தப்பித்து ஓடுகிறேன்.

**********

ஒளிர் அலைகள் கசிந்தபடி
ஒருநாள் "கனவு"வந்தது
அது
பகலின் இரவின் கடத்தலில்
அசாத்தியத்
திறன் கொண்டிருந்தது

வழியெங்கிலும் பூக்கள்
இறைந்து கிடக்கின்றன
திசையெங்கிலும்
மணந்த தென்றல் வீசுகிறது
நாள்கள் கோழித் தூக்கமாய்க்
கலைகின்றன

**********

பின் "வெறுப்பு" வந்தது
என் அன்பு, ஆசை,கனவு என
என் எல்லாவற்றையும்
வெறுத்தது
சுவாசம் கசந்த அதன் நெடி
இதய அறைகளில் வியாபிக்க
நான் துடித்துப் போகிறேன்

பிறகொரு நாளில்
நானே திறக்க முடியாத அளவுக்கு
என் கதவுகளை இழுத்து மூடி
அதன் திறவுகோலை ஆவேசமாய்த்
தூக்கியெறிந்தேன்

**********

இறுதியாகத் "தனிமை"வந்து
என்னை ஆசுவாசப் படுத்திற்று
வாழ்வில் நான்
புரட்டியப் பக்கங்களில்
விடுபட்டதை
ஆத்மார்த்தமாக விளக்கிற்று

சொற்களில் ஓவியங்கள் தீட்டி
கவித்துவமாகக் கொட்டிற்று
புற வெளிகளின்
காணாத அற்புதங்களை
மழையெனத் தூவிற்று

**********

இப்போது என் திறவுகோலின்
அவசியம் புரிந்து
வாழ்வின் பெருவெளிகளில்
தேடித் திரிகிறேன்
எங்கும் எப்போதும் புதிராக
இருள்
கவிந்தே கிடக்கிறது

எதிர்வந்த காலம்
"பருவங்கள் புலம் பெயர்ந்தன
இல்லாததை ஏன்
வீணாகத் தேடுகிறாய்" என்றது
காலத்தின் தோள்களில்
சாய்ந்து
கண்ணீரோடு குமுறுகிறேன்

**********

உடைந்த அழுகை பீறிட
நான் பின்னோக்கிப் போகிறேன்
நான் இழந்தவைகள்
என்னையோர் கேலிச் சித்திரமாய்ப்
பார்த்து நகைக்கின்றன
கிளையிலிருந்து நழுவிய
ஒரு பூவென விழுகிறேன்

என் கதவுகள்
இத்து உலுத்து தாமாக
உடைந்து சிதறியது பின்னொருநாளில்
இன்று
வெறிச்சோடிய அதன் வாசலில்
உயிர் சொட்டிக்
காத்திருக்கிறேன் நான்...!
------------
கவிதை ஜாம்பவான்கள் பங்குபெற வெற்றிகரமாகப் பயணிக்கும் இத்தொடரில் அடியேனுக்கும் ஒரு வாய்ப்பை நல்கிய தோழர் திரு.கவித்தா சபாபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்....!!
அன்புடன்
-சுஜய் ரகு-

எழுதியவர் : சுஜய் ரகு (22-Mar-16, 9:10 am)
பார்வை : 83

மேலே