காலச்சுவடுகள் - 7 மீமணிகண்டன்

ஆடித் திங்கள் பதினெட்டு,
ஆடி யிங்கு கரைதொட்டு,
கூடி நின்ற சனந்தொட்டு,
பாடு தம்மா நதிமெட்டு !

ஊருந் தாண்டி உறவுகள்,
பேருந் தேறி வருவார்கள்,
யாரும் இங்கே இணைவார்கள்,
தேரைக் காண நிறைவார்கள் !

ஆடி நீந்திக் களிப்போடு,
சூட மேந்தி மலரோடு,
பாட நன்றிப் பரிவோடு,
நாடி வாரார் மனதோடு !

அத்தை அம்மான் விருந்தோம்பல்,
பூத்த பெண்மான் உடனாவாள்,
பார்த்து வார்த்தைப் பரிமாறல்,
வேர்த்து நாணும் விடலைகள் !

கம்பு சுற்றும் குதிரைக்கும்,
செம்புக் கம்பி வளவிக்கும்,
நோன்பி ருக்கும் சிறுவர்க்கும்,
தெம்பு சேர்க்கும் கடைக்கூட்டம் !

பச்சை நீலம் பவழத்தில்,
இச்சை கூட்டும் நகைபூட்டல்,
மிச்சம் இன்றி அரிதாரம்,
உச்சம் ஆடை அலங்காரம் !

சேராய் எம்மை நதியாரே
தாராய் நீயும் பதினாறே
பேறாய் உன்னை வழிபட்டேன்
வாராய் மீண்டும் பதினெட்டே !


-மீ. மணிகண்டன்

எழுதியவர் : மீ. மணிகண்டன் (23-Mar-16, 3:31 pm)
பார்வை : 139

மேலே