தந்தை

தந்தையே தருவார் முகவரி
தந்தையிலார் நிலை இழுபறி
உலகில் வாழ்கின்ற பலபேரின்
உயர்வுக்கு அவரே அறிகுறி

ஆசான் போன்று உடனிருந்து
அறிவை வளர்ப்பவர் தந்தைதான்
உள்ளங்கை நெல்லிக் கனிபோன்று
ஊக்கத்தை தருபவர் தந்தைதான்

படித்திடும் வயதை நாமடைந்தால்
பள்ளியில் கொண்டு சேர்த்திடுவார்
அன்பையும் பண்பையும் ஆழ்மனதில்
அழகாய் தினமும் வார்த்திடுவார்

பாடங்கள் நான்றாய் நாம்படித்து
பட்டங்கள் பெற்றிட உதவிடுவார்
உலகினில் நம்மை உயரவைத்தே
உள்ளத்தில் பெருமிதம் கொண்டிடுவார்

ஒவ்வொரு நாளும்தன் அனுபவத்தால்
உலகினை நமக்கு புரியவைப்பார்
தோளுக்குமேல் நாம் வளர்ந்தபின்னே
தோழனைப்போல் என்றும் துணையிருப்பார்

தவறுகள் செய்திடும் வேளைகளில்
திருத்தியே நேர்வழி காட்டிடுவார்
கனமாய் பாசத்தை மனம்கொண்டு
கண்டித்து நல்வழி கூறிடுவார்

தந்தைதான் நம் முதல்உறவு
தயங்காது அவர்க்கு தினமுதவு
தந்தையின் மனதை மகிழ்வித்து
தனயன் நீயென உணர்த்திவிடு

எளிமை சிக்கனம் கடைபிடித்து
ஏற்றத்தை நமக்கு தந்திடுவார்
தன்னலம் பெரிதும் குறைத்துக்கொண்டு
என்றும் நமக்கென உழைத்திடுவார்

கடனும் உடனும் தான்பெற்று
கடமையை முழுதாய் முடித்திடுவார்
கடன்சுமை நம்மை தாக்காமல்
கண்ணியமாய் அதை தீர்த்திடுவார்

தான்காண முடியாத உயர்நிலையை
தன்மகன் கண்டிட தனைதருவார்
தாயினும் மேலான தனிஅன்பை
தன்னுள்ளே வைத்தே மறைத்திடுவார்

தந்தையின் முன்னே தலைகுனிந்து
தணிவாய் பேசிடு உனைஉணர்ந்து
தந்தையின் மனது உன்பணிவால்
தானாய் மகிழ்ந்திடும் தலைநிமிர்ந்து

தந்தையின் சொல்லை மந்திரமாய்
சிந்தையில் வைத்தே போற்றிடுவோம்
தந்தையின் கனவினை நனவாக்க
எந்திரமாய் தினம் உழைத்திடுவோம்

பாவலர் . பாஸ்கரன்

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (23-Mar-16, 6:32 pm)
Tanglish : thanthai
பார்வை : 145

மேலே