பெண்
பெண்பிறப்பே பெருமைபல ஈட்டும் – அது
பூமியிலே மகிழ்வலையைக் காட்டும்
பண்பாடு யாவினையும் ஊட்டும் –ஒரு
பரிவோடு மானுடத்தைத் தீட்டும்.
பெண்அற்ற உலகமதும் இல்லை –அந்தப்
பெண்இன்றேல் ஏதிங்கு பிள்ளை
என்றுமவள் மணக்கின்ற முல்லை –அந்த
மணமின்றேல் வந்துவிடும் தொல்லை.
கண்ணாகப் பெண்மையினைக் கொள்ளு –அந்தப்
பொறுப்பின்றேல் நீஆவாய் புல்லு
கடமையினை உணர்ந்து நீ நில்லு – பின்
வருகின்ற இன்பத்திலே துள்ளு .
கருவுற்று ஈன்றிடுவாள் பிள்ளை –அதைக்
காத்திடவும் பட்டிடுவாள் தொல்லை
உருவாக்கும் தாய்மைக்கும் எல்லை –இந்த
உலகத்தில் உண்டென்பார் இல்லை.
பெண்ணவள்தான் குடும்பத்தின் விளக்கு –அதற்கு
என்றென்றும் இல்லையொரு விலக்கு
உண்மையினை எடுத்துரைத்து விளக்கு –பின்
தோன்றாது குழப்பத்தால் வழக்கு.
சுமந்திடுவாள் மாதங்கள் பத்து –அந்தச்
சுகந்தனிலே ஈன்றிடுவாள் முத்து
சூட்டிடுவோம் மலர்மாலைக் கொத்து –நம்
சோர்வினையும் இன்றிங்கு வித்து.
பெண்என்றால் என்றென்றும் அழகு –ஒரு
பண்போடு வாழ்வதனில் பழகு
உண்மையினை உணர்ந்திடணும் உலகு –தீய
எண்ணம்வரின் விட்டுநீ விலகு.