உணர்வோம் இனியேனும்

எவனோ ஒருவன் எவனோ ஒருவன் கையில் தானே - இந்த
புவனம் சுழலுது புவனம் சுழலுது உண்மை தானே
கவனம் வேண்டும் கவனம் வேண்டும் எதிலும் தானே - இல்லை
காட்சிகள் மாறி பொய் சாட்சிகள் கூறும் ஓர் நொடியில் தானே
மாறும் உலகின் விதிமுறையால் - விதி
மீறும் மனிதனின் நெறிமுறைகள்
நேரும் நிகழ்வுகள் யாவும் இங்கே
கூறும் இலைமறை உண்மைகளே
அதை அறியாமல் போகின்றோம் - பணம்
படைத்தவன் கையில் பொம்மைகள் ஆகின்றோம்
என்ன உணவு உன்ன வேண்டும் என்பதைகூட - இங்கு
எவனோ ஒருவன் எங்கோ இருந்து எழுதுகின்றானே
உனக்கு ஏற்ற உணவிது என்று உனக்கும் முன்னே
உரைத்துப்போன உன் முன்னோரெல்லாம் முட்டாள் இல்லை
புலரும் காலை பொழுதினிலே
பூக்கும் புது புது பூக்களைப்போல்
புது புது உணவுகள் பூக்குதிங்கே - நம்
நாவில் போதை ஏற்றிடுதே
நஞ்சென்று தெரிந்தும் நாம்
பிஞ்சு குழந்தைகளுக்கும் ஊட்டி மகிழ்கின்றோம்
மரமது குறைவாய் புகையது மிகையாய் கொண்ட தேசம் - அவருக்கு
மறுப்பேயின்றி இலவசமாக சுவாசிக்க காற்று
தருகின்ற தேசம் பாரினில் இங்கு நிறைய உண்டு - அவரெல்லாம்
காற்றை காசாய் மாற்றும் தந்திரம் அறியா மண்டு
மண்ணுக்கடியில் கிடைப்பதெல்லாம்
மனிதன் காசாய் மாற்றுகிறான்
மனதை மண்ணில் புதையிட்டு
மனிதன் பேயாய் மாறுகிறான்
உன் தேவைகள் எல்லாம்
எவனோ ஒருவன் எங்கோ இருந்து எழுதுகிறான்
வாழ்வியல் முறையில் மாற்றம் கண்டோம் மாற்றியதாரோ - இன்று
வீழ்ச்சியை நோக்கி மனித நேயம் வீழ்த்தியதாரோ
கேள்விகள் நிறைய கேட்க உண்டு கேட்பதும் யாரோ - இங்கே
கேள்விகள் கேட்க நேரமில்லாமல் செய்ததும் யாரோ
உணர்வோம் உணர்வோம் இனியேனும் - நடை
பிணமாய் வாழும் பிணியறுப்போம்
வாழ்வியல் முறையை திருப்பிடுவோம்
ஆழ் கிணற்று தவளை நாமில்லை என்றுரைப்போம்.....