காலச்சுவடுகள் 12 - கட்டாரி

குறிஞ்சி நெலத்துக்காரி
குயிலோசை சொந்தக்காரி
வட்டநெலா வளச்செடுத்து
புருவமுன்னு வச்சிக்கிட்ட
வான்மோட்டு வீட்டுக்காரி...
கொம்புத் தேனெடுக்க
கொல்லிமல மேக்கால
முத்தமிட்டுப் போன மச்சான
பறந்துவந்த அம்பொன்னு
பாறையில குத்தித் தைக்க.....

முல்லை நெலத்துக்காரி
முத்துப்பல்லு சிரிப்புக்காரி
செதுக்கிவச்ச தேக்கழகா
தெரண்டு நிக்கும் தேகக்காரி...
மந்தாரக் காட்டுக்குள்ள
மானுதேடிப் போன மச்சான
யானைப் பொதகுழியொன்னு
சறுக்கவிட்டு சமாதியாக்க....

மருத நெலத்துக்காரி
மயில்தோக கூந்தல்காரி
பச்ச நாத்து கூட்டத்துல
பாடியோடும் ஆட்டக்காரி...
ஆட்டுக்குத் தள ஒடிக்க
அந்திக்கொல்ல போன மச்சான
பாதியா அறுந்து விழுந்த
பாவிப்பய கம்பியொன்னு
கருக்கிச் சாம்பலாக்க..

நெய்த நெலத்துக்காரி
நெய்மீனு தேகக்காரி
அச்சா அளவெடுத்த
கெண்டக்காலு சீலக்காரி...
பகட்டாப் படகெடுத்து
பாய்மரத்த விரிச்ச மச்சான
எல்லயத் தாண்டுனான்னு
துவக்கெடுத்து தொளச்சிப்போட...

பாலை நெலத்துக்காரி
குளிச்செழுந்து நின்னாலும்
நெருப்பக் கக்கும் கண்ணுக்காரி...
மானத்துக்குக் கேடுவந்தா
மலையைப் பொரட்டும்
தெடத்துக்காரி......
மண்ணைக் காக்க மகஞ்சேன
சோக்கோட
மகத்துவமா போன மச்சான
குண்டடில செதஞ்சி போயி
கொசகொசன்னு உருட்டிவைக்க ....

அஞ்சுவக நெலமிருந்தும்
அளவில்லா பொழப்பிருந்தும்
அழுகவச்சே பாக்குதுங்க - எங்க
ஆமைக்கூட்டு அரசாங்கம்..
பூர்வீகக் குடியெல்லாம்
பொசுக்கிப் பொதச்சழிச்சி
அண்டவந்த பிடாரி யெல்லாம்
அரியணையில் ஏறிக்கிச்சி...
எல்லாரையும் கொண்டுபோக
ஐயோ.... எப்ப வரும்
இன்னொரு பூகம்பம்.......?

எழுதியவர் : கட்டாரி (31-Mar-16, 5:38 pm)
பார்வை : 132

மேலே