வேறு நிலாக்கள் 35நிலவொளியில் நாரை
என்னைக்கண்டதும்
பூமியைக்கீழே போட்டுவிட்டு வானில் பறந்தது பறவையொன்று
*
தவிப்புக்குரலெழுப்பியபடி
தனித்துப்பறந்தது
நாரையொன்று நிலவொளியில்
*
வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.
*
தும்பியின்
சிறகில் கண்டேன்
ஒரு ஜோடி வானம்.
*
கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.
*
நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அசைபோடுகிறது
பலநூறு வாய்களால்.
*
பலூன் விற்பவன்
குறட்டை விடுகிறான்
கலர் கலராய்.
*
தூண்டிலிட்டதும்
சிக்கிவிடுகிறது
குளம்.
*
மொழியை காற்றில்
வரைகிறது
ஊமையின் விரல்கள்.
*
சத்தம் பறந்துவிட
வெறும் கிளை
ஆடிக்கொண்டிருந்தது.
*
உரசாத கல்லிலெல்லாம்
உறங்கிக்கொண்டிருக்கும்
ஆதி நெருப்பு.
*
திரும்பிவராத
குருவிகளைத் தேடவாவது
கூடுகளுக்கும் வேண்டும் சிறகுகள்.
*
காற்றுக்கு வண்ணம்
தீட்டுகிறான்
பலூன் விற்பவன்.
"""""""""""""""""""""""" நிலாகண்ணன்
நடமாடும் நதியாகப்பிறந்து நிலவையடைய சிறகு விரிக்கிறது
இந்த கவிதைகள்