கலையும் கனவு
கை குலுக்கி விடை பெறும்
இறுதிக் கணங்களில்
மெல்லிய புன்னகையின்
மத்தியில் மிகுந்த
சிரமத்துடன் நீ மறைத்த
நீர் கோர்த்த விழிகளை..
கால வெய்யிலில்
காணாமல் போய்க் கொண்டிருக்கும்
வாழ்க்கைக் குட்டையின்
நீர் தேங்குமளவு நினைவுகளில்
நிலைத்த ஞாபக மீன்களென
நீந்திச் செல்ல அவற்றைத்
தேயும் உணர்வொளிக்குள்
தேடிக் கொண்டிருக்கிறேன்..
எதுவுமற்ற எம்
இடைவெளிகளுக்குள்
எங்கோ ஒலிக்கும்
சில பாடல்கள்
நிறைந்து வருகையில்
கண்ணீரை மட்டும்
காய வைத்த
காற்றின் இயலாமைக்
கரங்களுக்கு கனவுகளை ஏனோ
பரிமாறத் தெரியவில்லை..
கொட்டிச் சிலிர்க்கும்
கொன்றைப்பூ மரங்களின்
இடையே கலைந்து
விலகும் உன் முகத்தை
மழையின் சிறு
தூறல்களிடையே
தேட முனையும் மனம்
கனத்த நிசப்தம் கலந்த
காரிருள் பொழுதினில்
கால இயந்திரத்தின்
கைபிடித்து பின்னோக்கி
நகரும் கணப் பொழுது நிகழ்வுகளை
கௌரவக் கழுகுகளின் அலகுகள்
கொத்திக் குதற
கலைந்து விடுகிறது
மறுபடியும் ஒரு கனவு..