பாரதியார்

எட்டய புரத்தில் பிறப்பெடுத்தாய்
ஏட்டினில் பாட்டால் எழுச்சிதந்தாய்
சுதேச கீதங்கள் வெளியிட்டே
சுதந்திரப் பயிருக்கு வேர்கொடுத்தாய்

சங்கத் தமிழின் வடிவெடுத்தாய்
தங்கம் நிகர்த்த குணம்படத்தாய்
உந்தன் பாடல் ஒவ்வொன்றால்
ஊமைக்கும் உணர்ச்சி வரச்செய்தாய்

மதுரத் தமிழுக்கு மகனானாய்
மக்கான மனிதர்க்கு மருந்தானாய்
சமத்தும் மனதில் மலரவைத்து
சாதியின் பிரிவிற்கு தீவைத்தாய்

முறுக்கு மீசையை நீவளர்த்து
முயலையும் புலியாய் பாயவைத்தாய்
கருக்குத் தீட்டிய வார்த்தைகளால்
களைத்த மனதிற்கு உரமளிதாய்

பாட்டுப் புலவன் பாரதியாய்
வேட்டு வைத்தாய் வெள்ளையர்க்கு
பட்டைத் தீட்டிய பாக்களினால்
பாடங்கள் சொன்னாய் பரங்கியர்க்கு

சாட்டை சவுக்காய் வார்த்தைகளை
ஏட்டில் இறக்கியே நீவைத்தாய்
ஆனந்த சுதந்திரம் அடைந்தோமென
ஆடியும் பாடியும் நீஉரைத்தாய்

கண்கள் இரண்டில் கனல்படைத்தாய்
பெண்கள் உயர்ந்திட துணிவளித்தாய்
காக்கைக் குருவிக்கும் உணவளித்து
கடும்பசியை நீபொறுத்துக் கொண்டாய்

பாஞ்சாலி சபதத்தை நீபடைத்து
நோஞ்சானைக் கூட நிமிரவைத்தாய்
ஒட்டிய வயிறுடன் துடித்தோரின்
பட்டினிப் போக்கிடப் பாடுபட்டாய்


சுடர்மிகு அறிவுடன் நீவிளங்கி
இடர்மிகு நிலையை நீவென்றாய்
விடுதலை விதையை நீவிதைத்து
கெடுதலை செய்வோரை நடுங்கவைத்தாய்

கல்லாய் மண்ணாய்க் கிடந்தோரை
கற்பூரம் போன்றே எரியவைத்தாய்
தலைப்பாகை அணிந்த உடையினிலே
தாய்நாட்டின் வடிவம் நீகொடுத்தாய்

மீண்டும் நீவந்து பிறப்பாயோ?
மங்கிய தமிழெழ உழைப்பாயோ?
ஊழலும் லஞ்சமும் நாட்டைவிட்டே
ஓடிட பாட்டுகள் படைப்பாயோ?

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (2-Apr-16, 4:38 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே