பொறாமை

வரவேற்பறையில்
ஒரு புத்தக அலமாரி
புத்தி ஜீவியான
எனக்கு அவசியமெனத் தோன்றி
கவிதை நாவல் கட்டுரைகள்
விஞ்ஞானம் மெய்ஞானம்
சுய மேம்பாடு இத்யாதி..
தமிழ் ஆங்கிலம் என
தெரிந்த மொழிகளில் புத்தகங்கள்
வாங்கி அடுக்கியிருந்தேன்...
இடையில் எப்போதாவது
தூசு தட்டி அடுக்கி வைங்க எனும்
துணைவியாரின் பேச்சை கேட்பது
அபூர்வம்தான்..
இன்று காலை
ஒரு கரப்பான் அலமாரியின்
கண்ணாடிக் கதவினடையில் தெரிய
அது எதை படித்திருக்கும்
என்று ஆவலோடு மனம் பதற
எல்லா புத்தகங்களும்
வெளியிலெடுக்கப்பட்டு
தூசு துடைக்கப் பட்டு
மீண்டும் அடுக்கப் பட்டன...
இம்முறை வரிசை மாற்றி..
கரப்பான்பூச்சி தடுமாறட்டும்
எந்த பக்கத்தில் விட்டோம் என்று...

# ஜி ராஜன்

எழுதியவர் : ஜி ராஜன் (8-Apr-16, 2:05 pm)
Tanglish : poraamai
பார்வை : 116

மேலே