பூர்வீகப் பாடலொன்று

நீலமலெ குறிஞ்சிப்பொண்ணு
----கால்கொலுசு குலுங்குமிடம்
கேரளத்து வனக் காத்து
----மயிர்க்காலில் சிலுங்குமிடம்
ஓடைகளின் சிலுசிலுப்பில்
---- உயிர் மூச்சு கலக்குமிடம்
சமவெளியின் இளஞ்சூட்டை
---- சேர்த்த மலை யடிவாரம்

அந்தமலை அடிவாரம்
----ஆனைகளின் காடு
காட்டுக்குள்ள மண்குடில்கள்
---கட்டி வாழும் ஊர் 'முள்ளி'

முள்ளி ... தெரியலையா
---முள்ளி ..?

முள்ளி எங்க ஊருஇந்த
----மேக்குமலை ஊருலதான்
'முள்ளும் மலரும்' னு
----சினிமா எடுத்தாங்க

முள்ளில்லா பூவப்போல
----மனுசங்க; எங்க பாடு
முள்ளோடு ஆடுதையா
----முள்ளிமலைக் காட்டுக்குள்ளே

சினிமாவுல மட்டுந்தான்
----சிங்காரமா காட்டுறாங்க
ஆசையெ காத்துல
---- தூது விடும் 'மருதி'கள…

ஆசையெ காத்துல
---- தூது விடும் 'மருதி' களோ
காய்ஞ்ச வெறகு வித்து
----கஞ்சிக்கு உயிர் சுமக்க

கடம்பனையும் இடும்பனையும்
----காட்டிலாகா அதிகாரிக
எடுபிடிக்கும் ஆபத்துக்கும்
---- வேட்டை நாய் ஆக்கிவிட

காட்டுப் பூச்சிதரும்
---- கொடிய நோய் வகைங்க
நோய் வகைக்கு இரையாகி
---- நலிஞ்ச தலைமுறைங்க....

நாங்க ...

நீலமலைச் சரிவுகளின்
----பூர்வீக இருளர் குலம்
எங்களோட குல வேர்கள்
----அறுபட்டு கெடக்கிற
கண்ணீர்க் கதை கேட்க
----காதுகளே இல்லை ஐயா

பட்டினியைப் போக்க
----பசியாற்றும் வாழ்க்கை யொண்ணு
பாவி சனம் குலம் தழைக்க
----மருந்துவத் திட்டமொண்ணு
எங்க புள்ள குட்டிஎல்லா
----எழுத்தறிய திட்டமொண்ணு
எங்க பச்சை மண்ணுமேல
----சத்தியமுன்னு எழுதிவைச்ச.....

திட்டங்கள் சில நேரம்
----வருவதுபோல் வாருதையா –
வர்ர வழி தெரியாது
----போற வழி புரியாது
முற்றத்துல ஆமணக்கு
----வெதெ மட்டும் காயுதையா
எங்களோட நிலா மட்டும்
----எப்பவுமே தேயுதையா

ஐயா ஞாயமாரே
----அதிகாரி சாமிகளே
கோட்டைக்குப் போய்வரும்
----வெள்ளை வேட்டி ராசாமாரே
புண்ணியம் விளையுமய்யா
---- உங்கபுள்ள குட்டிக்கெல்லாம்
பண்ணுங்கையா...எதாச்சும்
---- எங்க குலம்பிழைக்க..! (1993)



*****

(மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களின் சிறு துளிகளில் உயிர்விட்டுக் கொண்டிருந்த இவர்கள் கொஞ்சம் துளிர்விட்டுக்கொண்டிருக்கிறார்கள் இப்போது )

எழுதியவர் : கவித்தாசபாபதி (8-Apr-16, 10:49 pm)
பார்வை : 349

மேலே