‪‎ஒத்தையிலே நிற்கிறியே‬

ஓஹோன்னு வளர்ந்து நின்றன ஓராயிரம் மரங்கள்
பல விதமான பறவைகளுக்கு அவையே அடைக்கலங்கள்
சிறு சிறு விலங்குகளுக்கு இருந்தது சொர்க்கமாய்
இப்போது அந்த இடமோ பார்ப்பதற்கு துக்கமாய்

காடயே தரைமட்டமாக்கியது ஒரு புதிய திட்டம்
பறவையும் விலங்கும் பதற எவருக்கிங்கு நட்டம்
காசுள்ளவன் மகிழ்ந்திருக்க ஆனது பொழுதுபோக்குத் தலமாய்
பசுமை அழித்து பகட்டாய் மாறியிருந்தது ரணமாய்

வாழ்ந்த செடிகளை வீட்டின் தொட்டியில் வைத்தான்
சுதந்திர பறவைகளை அடைத்து கூண்டினில் வைத்தான்
காசு சேர்க்கணும் என்றஎண்ணத்தை மனதினில் வைத்தான்
தனக்கென்ன லாபம் என்பதற்காக மட்டுமே உழைத்தான்

பறவைகளின் ஓலங்கள் நடுஇரவினில் அங்கே கேட்கும்
மரங்களின் அழுகையும் அப்பப்போ காற்றில் வரும்
விலங்குகளின் கதறலும் அதனூடே சேர்ந்து வரும்
அழித்தவனை இவையனைத்தும் என்ன செய்திட முடியும்

தன் உரிமை இழப்பிற்காய் எப்பறவை போராடும்
தன் தலைமுறையே வெட்டுண்டுதாய் எம்மரம் எடுத்துரைக்கும்
முகப்பிலிருந்த "அறிவிப்பு பலகை" வரவேற்றது அனைவரையும்
அது "ஒத்தையில் நின்ற" அவ்விடத்தின் உயிரென‌ எவருக்குத் தெரியும்?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Apr-16, 9:50 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1953

மேலே