உக்ரன்

விந்த்ய ராஜ்யத்தின் தலை நகரான வீரபுரியில் ஒரே கொண்டாட்டம். வெற்றி மண்டபத்தில் அரசர் வீற்றிருக்க மந்திரிகளும் சேனாதிபதிகளும் அமர்ந்திருக்க, நாட்டியங்களும் நடனங்களும் நடந்தேறி கொண்டிருந்தன. நடன மங்கையர்களும் இசை கலைஞர்களும் தங்கள் பங்கிற்கு வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர் .

எதிரி நாடான பந்தய ராஜ்யத்தை வென்று வெற்றி வாகை சூடி வந்த சேனைகளுக்கு இன்று வெற்றி தினம். வெற்றியை முன்னிட்டு வீரர்களுக்கு பொன்னும் பொருளும் மணியும் மாலையும் பரிசாக வழங்கப்பட்டது. வீர மரணம் எய்திய வீரர்களின் பிள்ளைகளுக்கு அனைத்து விதமான சலுகைகளும் கொடுக்க நிர்ணயிக்க பட்டது. வயது வந்ததும் அவர்களையும் அரசு பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நிறை வேற்ற பட்டன.

போரில் அடிபட்ட யானைகளுக்கும் குதிரைகளுக்கும் கொட்டிலில் மருத்துவ உதவி கொடுக்கப்பட்டது. சேதமடைந்த தேர்களும் மற்ற ஆயுதங்களும் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது, சரி செய்ய முடியாத வாள்களும் ஈட்டிகளும் வில்களும் தூக்கி எறியப்பட்டன. அதே போல் மிகவும் அடிபட்டு பிழைக்க முடியாத யானைகளும் குதிரைகளும் கூட மரணம் தருவிக்க பட்டது. அதையும் வீரமரணமாகவே கருதப்பட்டது. அத்தகைய யானைகளின் பாகனும் குதிரை வீரனும்....இளம் வயதானால் படையில் சேர்த்து கொள்ளப்பட்டனர், வயதானவர்கள் மற்றும் படையில் சேர எண்ணமில்லாதவர்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.

இது வரை ஆறு போர்களில் வெற்றி வாகை சூடிய யானை உக்ரனும் அதில் ஒன்று. வயதானது என்பதை தவிர உக்ரைனின் உகரத்துக்கு இன்றும் குறைவில்லை. அதன் பாகன் விஜயனும் வயதானவன் என்றாலும் யானையின் மீது அமர்ந்து விட்டால் அவன் உடலிலும் உயிரிலும் வீரம் பெருக்கெடுக்கும். வெற்றி வேல் வீரவேல் என்று அவன் கையில் வேலை பிடித்து விட்டால் யாரும் அவர்களை எதிர் கொள்ள முடியாது.

யானை படையில் உக்ரனோடு சேர்ந்த எல்லா யானைகளும் தொடர்ந்த போர்களில் வீர மரணம் எய்தின. ஆனால் உக்ரனோ இன்றளவும் விஜயனின் பேரிகை முழக்கத்தை கேட்டால் வெகுண்டு எழுந்து கால்களில் அகப்படுவோரை உதைத்து மிதித்து முன்னேறி செல்லும். அதை கட்டு படுத்தவோ நிறுத்தவோ விஜ்ஜயன் ஒருவனால் மட்டுமே இயலும். அந்த பேரிகை முழக்கம் உக்ரனின் உட்புகுந்து ஒரு உத்வேகத்தையே உந்தும். உக்ரனின் கால்களையும் தும்பிக்கையையும் வீராவேசமாக வீசி எடுத்து பகைவர்களை மாய்த்து சாய்க்கும். அச்சம் என்பது இல்லாமல் வேகமும் வீரமும் நிறைந்த கஜன் உக்ரன்.

மன்னருக்கு இது யாவும் தெரிந்திருந்தும்.... மந்திரியும் சேனாதிபதியும் சொல்வதினால் உக்ரனையும் படையிலிர்ந்து விலக்க ஆணை பிறப்பித்தான். விஜயனை அழைத்து கூறினார் மந்திரி. செய்தி கேட்டு முதலில் திகைத்த விஜயனோ மன்னரின் ஆணைக்கு எதிர்த்து ஒன்றும் பேச முடியாதவனாய் வாயடைத்து போனான்.

மனதில் உக்ரனை பிரியும் வேதனையில் இருந்த விஜயனோ பரிசு பொருள்களையும் கூட மறுத்து விட்டான். நாடே வெற்ற்யை கொண்டாடும் தருவாயில் அவன் , மட்டும் தன் உயிரான தோழனான, உடன் பிறந்தவனாய் பாவித்த உக்ரனை பிரியும் சோகத்தில் வீடு திரும்பினான்.

அன்றுஇரவு முழுதும் உறக்கம் வராது தவித்தான். மறு நாள் விடிந்ததும் அரசு கொட்டிலுக்கு ஓடினான். ஆனால் அவன் செல்வதற்கு முன்னமே உக்ரனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைந்த நிலையிலேயே தேரில் ஏற்றி காட்டிற்கு அழைத்து சென்று விட்டதாக கொட்டிலின் காவலாளி சொன்னான்.

அவன் அங்கேயே உக்ரனின் கொட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்து கண்களில் நீர் மல்க மன வேதனயுற்றான். பல மணி நேரம் வரையும் காத்திருந்தான். சென்ற தேரும் வீரர்களும் திரும்பாதது கண்டு கலக்கமுற்றான். உக்ர்னுக்கு ஏதேனும் நிகழ்ந்து இருக்குமோ என்று அவன் மனம் பதபதைத்தது. இங்கு நாட்டில் இருந்து வேதனை படுவதை விட தானும் உக்ரனோடு காட்டிற்கே சென்று விடலாம் என்று நினைத்தவன் தன் பேரிகை,
ஊதுகொம்பு, வேல், உக்ரனின் மேல் போடும் பட்டு துணி அனைத்தையும் எடுத்து கொண்டு காட்டை நோக்கி ஓடினான்.

இதற்கிடையில் காட்டில் விடப்பட்ட உக்ரனோ ஒன்றும் புரியாது இங்கும் அங்கும் ஓடினான். அடர்ந்த மரங்களும் செடிகளும் இயற்க்கை தான் என்றாலும் காட்டை என்றுமே பார்த்திராத உக்ர்னுக்கு ஒரு பயமே உள்ளுக்குள் தோற்றியது. சங்கிலியை அவிழ்த்து ஓட விட்ட வீரர்கள் சிறுது நேரம் அங்கேயே இருந்து உக்ரன் காட்டின் உட்பகுதிக்கு போனதும் திரும்ப எண்ணி அதன் பின்னே மெதுவே சென்றனர்.

மயக்க நிலை மாறாத உக்ரனுக்கோ ஒன்றும் புரியவில்லை. என்றும் தன் கழுத்தில் ஆடும் மணி எங்கே... தன் மேல் போர்த்தப்படும் பட்ட துணி எங்கே... மணியும் மாலையும் எங்கே... கால்களில் சங்கிலி எங்கே.... எல்லாவற்றிற்கும் மேலாக தன் யஜமானன் எங்கே....என்று குழம்பிய நிலையில் பிளிறினான். தன் ஒரு பிளிரலுக்கு ஓடி வரும் பாகன் எங்கே....

நிலைமை புரியாது அந்த ஐந்தறிவு ஜீவன் தான் செய்த பிழயறியாது அங்கும் இங்கும் ஓடியது. தன் கொட்டிலை தேடியது. விஜயனின் குரல் தேடி அல்லலுற்றது. திசை தெரியாது வழி தெரியாது எங்கு செல்கிறோம் என்று தெரியாத அந்த ஜீவன் ஒரு புதை குழியில் விழுந்தே விட்டது.

தன் பாரத்தால் இன்னும் இன்னும் அந்த புதை குழிக்குள் இழுத்து செல்லப்பட்டது. வேகமாக பிளிறியது. போரில் கூட காணாத பகைவனாய் அந்த புதை குழி விளங்கியது. வாளும் வில்லும் வைத்து நேர் எதிரே நின்று போர் செய்த வீரர்களையும் யானைகளையும் படைகளையுமே பார்த்திருந்த உக்ரனுக்கு இந்த பகைவன் பலசாலியாக தோன்றினான். தன் இறுதி நேரம் வந்ததை உணர்ந்து மேலும் சத்தமாக பிளிறியது. போரிலும் காணாத மரண பயம் தொற்றி கொண்டது.

உக்ரனின் விடாமல் பிளிரும் சத்தம் கேட்டு ஓடி வந்தனர் வீரர்களும் காட்டுவாசிகளும். தடிமனான கயிற்றை கொண்டு அதன் தும்பிகையில் முடிச்சு போட்டனர். கரையில் நின்று இழுத்தனர். உக்ரனின் எடை அதிகமானதால் ஒரு இழுப்புக்குள் வரவில்லை.... கயிற்றை விட்ட மாத்திரத்தில் உக்ரன் இன்னும் ஒரு அடி புதைக்குள் போனது. பின்னங்கால் இரண்டும் புதையில் புதையுண்டது. மெது மெதுவே உக்ரன் உள்ளே செல்வதை பார்த்தவண்ணம் என்ன செய்வதென்று புரியாமல் எல்லோரும் நின்றிருந்தனர். காட்டில் விட வந்த வீரர்களும்.... அரசனிடமும் விஜயநிடமும் உக்ரனின் மரண செய்தியையா எடுத்து செல்வது என்று வேதனை உற்றனர். அவர்கள் கண்ணெதிரே அந்த வீர யானை போரில் என்றும் வெற்றியே கண்ட உக்ரன் மரணத்தை நோக்கி அடி அடியே புதைந்து கொண்டிருந்தது.

உக்ரனோ பிளிறிக்கொண்டே இருந்தது. போரில் கண்ணெதிரே பார்த்த பகைவனை ஆவேசமாய் அவனை துவம்சம் செய்ய மட்டுமே அறிந்த உக்ரன் இப்போது கண்ணுக்கு தெரியாத பகைவனை எதிர்கொள்ள தெரியாமல் திணறியது. மயக்க நிலையின் உச்சத்தில் போன உக்ரன் பிளிறுவதையும் நிறுத்தியது. இதோ உக்ரைனின் இறுதி நேரம் என்று பார்த்தவர்கள் ஓலமிட்டு அழுதனர்.

இதற்குள் உக்ரைனை தேடி ஓடி வந்த விஜயன்....அங்கு வந்து சேர்ந்தான். தன் அருமை தோழனை இந்த நிலைமையில் பார்க்கவா ஓடோடி வந்தேன் என்று அழுது புலம்பினான். ...தன கையில் இருந்த பேரிகையை எடுத்து பேரிடியாய் வாசித்தான் ஊதுகொம்பால் வேகமாக ஊதினான். போரில் உக்ரனுக்கு உத்வேகம் குடுத்த அந்த சத்தம் அதன் காதில் விழுந்தது. எங்கிருந்தோ வந்த அந்த சத்தம் அந்த பேரிகையின் சத்தம் ஊதுகொம்பின் சத்தம் உக்ரனை எழுப்பியது...போரில் வெகுண்டு எழுவதை போல் எழுந்தது. தன் பின்னங்கால்களை வேகமாக உந்தி தள்ளியது....இதை கண்ட வீரர்களும் காட்டுவாசிகளும் தும்பிக்கையில் கட்டிய கயிற்றை கரையின்று இழுத்தனர்.....

விஜயனின் பேரிகையின் சத்தமும் ஊதுகொம்பின் சத்தமும் மக்களின் சத்தமும் உக்ரனுக்கு தேவையான பலத்தை கொடுத்தது.... தன் கால்களையும் தும்பிக்கையும் ஒரே வேகத்தில் முன்னெடுத்து புதை குழியை விட்டு வெளியே வந்து விழுந்தது.

விஜயன் ஓடி சென்று அதை கட்டிகொண்டு அழுதான். நாட்டில் உனக்கு இடம் இல்லை ஆனால் காட்டில் உனக்கும் எனக்கும் இடம் உண்டு என்று அழுதான். இனி தானும் அந்த காட்டிலேயே உக்ரனோடு இருந்து விட தீர்மானித்தான்.
வீரர்களும் மக்களும் களைந்து சென்றனர்.

விஜயன் உக்ரனின் மேல் ஏறி கம்பீரமாய் உட்கார்ந்தான்.

உக்ரனும் சந்தோஷ பிளிறலோடு காட்டை நோக்கி நடந்தது.

எழுதியவர் : சுபாசுந்தர் (10-Apr-16, 1:55 pm)
பார்வை : 241

மேலே