சொற் சுவை

பொதுவாக நமது எழுத்துகள் படிக்கப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் எழுதுகின்ற எல்லாருக்குமே நினைப்பிருக்கும். ஆனால் அவை பரவலான கவனம் பெறாத போதோ, தவிர்க்கப்படும்போதோ ஏன் இப்படி…… என்கிற கேள்வி எழும்.
நாம் சொல்ல நினைப்பதில் விஷயம் ஏதும் இல்லாவிட்டால் நிச்சயமாய் எவ்வளவு நன்றாகச் சொன்னாலும் அது கவனம் பெறாது.
அதே நேரம், சொல்ல வருவதில் விஷயம் இருக்கிறது. ஆனால் சொல்வதில் சுவையில்லாதபோதும் அது உரிய கவனத்தைப் பெறுவதில்லை.

சுவையாகவும் பொருளாழமிக்கதாகவும் உள்ள சொற்கள் தாமதமாயினும் நிச்சயம் உரிய அங்கீகாரத்தைப் பெறும்.

சரக்கில்லாமல் வெற்று அகப்பையில் அள்ளி வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு யாரும் உதவ முடியாது. அதே நேரம் சரக்கு இருப்பவர்களுக்கு அதை எடுத்து எல்லார்க்கும் கொடுப்பதற்கான அகப்பையைக் கொடுக்க முடியும்.

அப்படிக் கொடுக்கின்ற ஓர் இலக்கியத்தில் இருந்துதான் இந்தப் பதிவு.

சொல்லுக்கு இரண்டு வகையான சுவைகள் உள்ளன.

ஒன்று அதன் குணத்தால் ஏற்படும் சுவை.

இரண்டு அதன் அலங்காரத்தால் ஏற்படும் சுவை.

அதென்ன சொல்லின் குணம்?

ஒரு சொல்லுக்குப் பத்து விதமான குணங்கள் இருக்கின்றன.

1) செறிவு - சொற்கள் நெகிழச்சியாய் இல்லாமல் ஒன்றிற்கொன்று இறுக்கமான கட்டமைப்பு உடையதாய் நின்று பொருளைப் புலப்படுத்துதல்.

2) தெளிவு- சொல்ல வேண்டிய பொருளை வெளிப்படையாய்ப் புரிந்து கொள்ளும்படியாகச் சொற்களை அமைத்தல்.


3) சமநிலை – வல்லினமும் மெல்லினமும் இடையினமும் கொண்டு ஆக்கப்படும் சொற்களுள் ஏதேனும் ஓர் ஓசை மட்டும் அதிகமாகி விடாமல் இம் மூன்று ஓசைகளும் கலந்து சமநிலையில் அமையுமாறு சொற்களை அமைத்தல்.

4) இன்பம் – சொல் தான் புலப்படுத்தும் பொருளினால் கேட்பவருக்கு இன்பம் உண்டாக்குதல். அருவறுப்பூட்டுதல், பழிச்சொற்கள், அமங்கலச்சொற்கள் இவற்றைத் தவிர்ப்பதும் சொல்லிற்கு இன்பம் ஊட்டுவனவாக அமைவன.

5) ஒழுகிசை - கேட்பதற்கு இனிமையுடைய சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.

6) உதாரம் – சொல், அது தரும் நேரடிப் பொருளே அன்றி உட்புகுந்து ஆராயும் அறிவினை உடையவர்களுக்கு இன்னும் ஆழமான பொருளைத் தரும்படி அமைத்தல்.


7) உய்த்தலில் பொருண்மை – ஒன்றை விளக்குவதற்கு மிகவும் பொருத்தமுடைய சொல்லைத் தேர்வு செய்தல்.

8) வலி – சொல்லப்படும் கருத்திற்கு வலிமையூட்டும் சொற்களைப் பயன்படுத்துதல்.

9)காந்தம் – உலக வழக்கோடு மாறுபடாதவாறு சொற்களைத் தேர்ந்து பயன்படுத்துதல்.

10) சமாதி – நயம் கருதி ஒன்றன் தன்மையை இன்னொன்றிற்கு ஏற்றிக் கூறுதல் ( செவிக்கு உணவு என்பது போல )

இவை நாம் பார்த்த பத்தும் சொல்லின் இரண்டு வகையான சுவைகளுள் சொல்லின் குணத்தினால் ஏற்படும் சுவைகள் ஆகும்.

அடுத்துச் சொல்லின் அலங்காரத்தால் ஏற்படும் சுவைகள் இரண்டு வகைப்படும்.

1) சொல்லலங்காரம் - சொற்களில் எழுத்துக்களைப் பிரதானமாகக் கொண்டு சொற்களை அமைத்தல். ( வார்த்தை மற்றும் எழுத்து விளையாட்டுப் போல )

2) பொருளலங்காரம் - சொற்களின் பொருளைப் பிரதானமாகக் கொண்டு கருத்தினை அலங்கரிக்கும் சொல்லாடல் ( உவமை, உருவகம் போன்றவற்றைக் கையாளுதல் போல )

நாம் கண்ட இச்சொல்லின் சுவைகளுள் சில இன்றைய நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஒத்துவராமல் போயிருக்கலாம். அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் மற்றவை இன்றும் பயன்படுபவை. நாம் பயன்படுத்துபவை.

சொல்லின் குணத்திற்கும் சொல்லில் செய்யப்படும் அலங்காரத்திற்கும் வேறுபாடு ஓர் அழகிய உவமையின் மூலம் சொல்லப்படுகிறது.

சொல்லின் குணம் என்பது இளம்வயதில் ஒருவரிடம் இருக்கும் அழகினைப் போலப் நாம் பயன்படுத்தும் சொல்லில் இயற்கையாகவே அமைந்திருக்க வேண்டியது.

சொல்லின் அலங்காரம் என்பது, உடலை அழகுபடுத்தவும் உயர்த்திக்காட்டவும் பயன்படும் மேற்பூச்சு, ஆபரணங்களைப் போன்றது.

சரி, சொல்லுக்குச் சுவையூட்டுவதைப் போலப் பொருளுக்கு இப்பபடி சுவையூட்ட ஏதாவது வழி இருக்கிறதா?

எந்த இலக்கியத்தில் இவை சொல்லப்பட்டுள்ளன…..?

அறிந்தவர்கள் கூறலாம்.





நன்றி - ஊமைக் கனவுகள்

எழுதியவர் : (11-Apr-16, 6:39 am)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : sor suvai
பார்வை : 245

மேலே