டிசம்பர் 2, 2015

அகம் முழுதும்
அழுக்கை சுமந்துகொண்டு
வெள்ளாடை புறம்கொண்டு
திரியும் வெளிவேடகாரர்களே!
வஞ்சகத்தின் விந்தில்
வெளிவந்த வணிகர்களே!

டிசம்பர் இரண்டு
ஊர் இருண்டதும்

ஏரியில் நீர் ஏறி
எங்கள் உயிர் மாண்டதும்

எறும்பாய் சேர்த்த பொருட்கள்
துரும்பாய் தண்ணீரில்
கலந்தது அறியுமோ

பசியால் தாய்பால்
தீர்ந்ததும்
பாக்கெட் பாலின் விலை
உயர்ந்ததும்
கதறிய குழந்தை
பதறிய தாய்
தற்கொலை செய்ததும்
உமக்கு புரியுமோ

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கடலாய் தெரிகிறது பூமி

தெருவெங்கும் தண்ணீர் தண்ணீர்
ஆனாலும் தாகத்தோடு மக்கள்

இந்து கோவிலில் கிறுஸ்துவர்கள்
தேவாலயங்களில் முஸ்லிம்கள்
மசூதிகளில் இந்துகள்

பார்த்து பார்த்து
பத்திரமாய் காத்துவந்த
சாதி மதம்
சுக்குநூறாய் போனது
இந்த வெள்ளத்தில்

மின்சாரமில்லா இருளிலும்
வெள்ளை வேட்டிக்காரர்கள்
செய்த சதியிலும்
குப்பை கூலமிருக்கும்
தெருவிலும்
வெள்ளத்தில் தெரிந்தது
வெள்ளை உள்ளம்கொண்ட
மனிதம்

எழுதியவர் : மனோ பாரதி (11-Apr-16, 8:14 pm)
பார்வை : 228

மேலே