கவனம் இது கண்ணீர் வரவழைக்கக்கூடும்

சுகப்பிரசவத்திற்கு பின்னும்
ஆளாளுக்கு வசைப்பாடுறாங்க
அம்மாவ ....
நான் பொண்ணா பொறந்துடேனாம்...!
பாசமே மறந்துபோச்சு ...
வெறுப்பையே விதைச்சுடாங்க...
என் கண்ணீர அறுவடை பண்றேன்
நான் பொண்ணா பொறந்ததால...!
பள்ளிக்கூடம் போயிட்டிருந்தேன்
திடீருனு ஒரு நாளு
என் படிப்பும் நின்னுப்போச்சி...
நான் வயசுக்கு வந்துட்டேனாம்...!
பாவிமக குத்த வச்ச
நேரம்...
எம்புள்ளைக்கு சரியில்லயாம்
வசைபாடுனா பாட்டி...!
எப்படி கரையேத்த
போறேன்னு தெரியலயே ..?
கண்ணீர் விட்டா
அம்மா...!
வீட்டோடவே வச்சுக்க
ஓடிடப்போகுதுனு
ஆளாளுக்கு அறிவுரை சொல்லுது
வந்த கூட்டம்...!
படிப்பு நின்னதால
வேலைக்கு போனேன்...
பண்ணயாரு கண்ணுபட்டு
பாழாப்போனேன்...!
பாவிமகள யாரு கட்டிபானு
பரிகாசம் பேசுச்சு உலகம்..
நான் வாழ்க்கை தாரேன்னு
பகட்டா வந்தான் ஒருத்தன்...!
வந்தவன் கேட்டான்
என் உடம்ப மட்டும்...
சாராய நாத்தம் வேற
என்னை உசிரோட சவமாக்குச்சு...!
சாவலானு முடிவெடுத்து
பூச்சிமருந்த கலக்கி குடிக்க நினைச்சப்போ
குபுக்குனு வந்த வாந்தி
புள்ள உண்டாகிருக்குனு சொல்லுச்சு
உன்ன கொல்ல மனசில்லாம
உசிர வெறுத்து வாழ ஆரம்பிச்சேன்..
பத்து மாச போராட்டம்
அய்யனாருக்கு காணிக்கை ...
முனிசாமிக்கு பொங்கலுனு ...
நித்தம் நாறு நேர்த்திக்கடன்
பையன் பொறக்கனுன்னு ...!
முதுகெலும்ப ஒடக்கிற மாறி வலியோட...
முக்கலும் முனங்களோட
பெத்துப்போட்டேன் உன்ன...!
கண்ண முழிச்சி பாத்தப்போ..
கண்ண முட்டுச்சு கண்ணீரு ...
நீயும் பொண்ணா பொறந்துட்டியே...
சாமிகூட ஏமாத்திருச்சே...?
பாவிப்பய வந்தான்
பச்ச உடம்புகாரினு கூட பாக்காம
படாடபடுத்துறான்
பொண்ணு பொறந்துடுச்சுனு ...!
எனக்கு பண்ணுண பாவம்
அல்ப ஆயுசுலயே போயிட்டான்...
உன்ன எப்படி ஆளாக்குவேனு
கொஞ்ச கலக்கமா இருக்குதே...!
உன்ன வாழ வைக்கிற வைராக்கியம்
தூக்கியெறிஞ்சேன் என் துக்கத்த..
எட்டாத உயரத்துக்கு நீ போன
உசிரா உன்னை மதிச்சவனும்
உன் வாழ்க்கையில வந்தான்...
கல்யாணம் பண்ணிக்கிட்டு ...
சந்தோஷமா நீ வாழு ....!
பாக்குற பாக்கியம்
எனக்கில்லனாலும்...
தெய்வமா அம்மா வாழ்த்துறேன்..
தங்கமே நீ நல்லாயிருக்கனும்...!
- கீதா பரமன்
( குடும்ப வன்முறையாலும் , சமூக வன்முறையாலும் பாதிக்கப்பட்டு
வாழ்க்கையை இழந்து கண்ணீரில் நீந்திக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சகோதரிகளுக்கு சமர்பணம்...)