தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 71

மாட மாளிகையின் ஓர் மஞ்சள் நிலா
ஏழை குடிசையை தேடி வந்த நிலா
வாசலில் அமர்ந்து - விடைபெற மறுத்து
விரிக்குது காதல் வலை எனக்கு..!
நான் விழுவதா இல்லை நழுவதா
ஒன்றும் புரியலை எனக்கு..
என் ஏழ்மை நிலையை நினைத்து..!

அவள் ஜாதியென்ன..; ஜனங்களென்ன,
வசதிகளென்ன..; வாய்ப்புகளென்ன…
அனைத்திலும் பண்மடங்கு உயர்ந்தவள்
எக்காலத்திலும் நானதில் தாழ்ந்தவன்

பழைய சோறும் ஊறுகாயும் எனது அன்றாட உணவு
நெய் சோறும் நேந்திரமும் அவளது அன்றாட உணவு
என் வீட்டில் அது எங்கே அனுதினமும் கிடைக்கும்
கிடைத்தாலும் எங்ளுக்கு அது பட்ஜெட்டில் உதைக்கும்

நான் உழைக்கும் மனிதன் உலாவுகின்றேன்
அவள் இரக்க குணமே என்னை உருக வைக்குது
பிழைப்பு தேடி நான் செல்லும் இடத்தில்
அவள் நினைப்பு என்னை பாடாய் படுத்துது

அவள் தூண்டில் போட்டால் வைரமீனாய் மாட்டும்
பிறகேனிந்த தகர மீனை பிடிக்க முயல்கிறாள்
பொன்னோடம் ஓடும் அவள் வீட்டு நீச்சல் குளத்தில்
பொதி சுமக்கும் ஓடம் என்னை நீந்தவிட பார்க்கிறாள்

நான் கொண்ட காதலுக்கு இறைவனே சாட்சி
சொல்ல வந்தாலும் ஏற்குமா அவள் வீட்டோட ஆட்சி
திரைகதையில் அமைப்பார்கள் அதுபோன்ற காட்சி
நடைமுறையில் அது நிச்சயம் ஒத்துவராத பேச்சி..!

எழுதியவர் : சாய்மாறன் (11-Apr-16, 10:53 pm)
பார்வை : 62

மேலே