கவனம் – ஒரு பக்க கதை

கவனம் – ஒரு பக்க கதை
-
இப்படி நடக்கும் என ராமலிங்கம் கனவுகூட
கண்டதில்லை. அவர் பணம் போட்டு வைத்திருந்த
பைனான்ஸ் கம்பெனி திடீரென மூடப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு மாதத்தில் மகள் கல்யாணம்.
இடிந்து போனவரை அவர் மனைவிதான் தேற்றினாள்.
‘‘உங்க அண்ணனைக் கேளுங்க. நாம நல்லா இருந்த
காலத்துல அவங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கோம்.
அவர் நிச்சயம் நம்மளைக் கைவிட மாட்டார்!’’
என்றாள்.

அண்ணன் சுந்தரலிங்கத்திற்கு போன் செய்து நடந்ததைச்
சொன்னார் ராமலிங்கம். எதிர்பார்த்தது போலவே
அண்ணன் திட்ட ஆரம்பித்தார். ‘‘படிச்சவன்தானே நீ?
பரிசுப் போட்டி, கார், ஃபிளாட், அதிக வட்டினு ஆசை
வார்த்தையைக் கேக்குறப்பவே எச்சரிக்கையாக இருக்க
வேணாம்..? இப்படி ஏமாந்து நிக்கிறீயே! சரி விடு…
நாளைக்கு சாயந்தரம் வீட்டிற்கு வா. பணம் தர்றேன்!’’
என்றார்.

அடுத்த நாள் அண்ணன் வீட்டில் வரவேற்ற அண்ணியின்
முகம் சரியில்லை. அண்ணன் ஒரு மூலையில் சோகமாக
அமர்ந்திருந்தார். அண்ணிதான் சொன்னாள்.‘‘உங்களுக்குக்
கொடுக்க, பணம் எடுத்துட்டு காலைல பேங்க்ல இருந்து
வெளில வந்திருக்கிறாரு… யாரோ ஒருத்தன், ஒரு நூறு
ரூபா தாளை கீழ போட்டுட்டு, ‘உங்களுதா’னு ஆசை
காட்டியிருக்கான். இவரு கவனமா இல்லாம குனிஞ்சு அதை
எடுக்க, மொத்தமா இவர் பணத்தை அடிச்சுட்டான்!’’
ராமலிங்கம் பேச்சற்றுப் போனார்.

———————-
வி.அங்கப்பன்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (13-Apr-16, 12:08 pm)
பார்வை : 210

மேலே