பாலைவன சோலை-ஒரு பக்க கதைகவிஜி

"நியந்தா......... சீன் சொல்லிட்டியா.....?"-எப்பவும் போல கத்தினான்.. அந்தப் படத்தின் இயக்குனர் விஜய்......
"எல்லாம் ரெடி சார்... டேக் போலாம்..." என்றாள்.. நியந்தா.... ஒரு உதவி இயக்குனரின் நம்பிக்கையோடு....
மாலை மயங்கும் நேரம்.. பாலைவனம்... பாய் விரித்தாற் போல கிடந்தது...அந்த டீம் .... கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தது.... மனது முழுக்க.. அந்த படத்தின் காட்சி ஓடிக் கொண்டேயிருந்தது, விஜய்க்குள்...
நேரம் ஓடிக் கொண்டிருக்க... அந்தக் காட்சியை கச்சிதமாக எடுத்து விட வேண்டும் என்ற நம்பிக்கையோடு.. விஜய்...பிரேம் பார்த்து... அட்மாஸ்பியர் பார்த்து... ஒரு வித நிலைக்குள் தன்னை நிறுத்தியபடியே......'கேமரா.........."- என்று கத்தினான்....
"ரெடி.....சார்...கேமரா ரன்னிங்"- என்று கேமராமேன் பதில் குரல் கொடுக்க... சற்று பீல்டை உற்றுப்பார்த்து விட்டு.. "ஆக்சன்"- என்று கத்தினான்...விஜய்...
அடுத்த கணம்.. கதையின் நாயகி.... அந்தப் பாலைவனத்தில்... ஓடத் துவங்குகிறாள்.... பின்னால் இருவர் அவளை விரட்டத் துவங்குகிறார்கள்.... கேமராவுக்கு பின்னால் நின்ற விஜயின் கண்களில்... அந்தக் காட்சி கச்சிதமாக வந்து விட வேண்டும் என்ற பரிதவிப்பு தெரிந்தது......காட்சிக்கு தேவையான காற்றை... புரடக்சன் டீம்... மின்விசிறி கொண்டு உருவாக்க... காட்சி சதுரத்துக்குள் அழகாய்.....விழுந்து கொண்டிருந்தது....
ஒரு கட்டத்தில்... காட்சி... நினைத்ததை விட அற்புதமாக வந்து விட... மெய்ம் மறந்த இயக்குனர்... மென் புன்னகையில்...
'வாவ்.....' என்று கத்திக் கொண்டே ...... கட் சொன்னான்...
டீம்.... ஒரு கணம்... ஸ்தம்பித்தது.... கட் சொன்ன பிறகும்... அவர்கள் ஹீரோயினைத் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தார்கள்... ஒன்றும் புரியாத டீம்... ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே..அவசரமாய் இயக்குனரைப் பார்க்க....... அவன் எப்போதும் போல.. "என்ன நடக்குது.. ஸ்டாப் இட்...மேன்......." என்று கத்தினான்...
மறு கணம் உடன் இருந்த உதவி இயக்குனர்கள் மூவர்.. கத்திக் கொண்டே அவர்களின் பின்னால் ஓடத் துவங்கினார்கள்... ஒரு வித தடுமாற்றத்தில் அந்த டீம்.. மீண்டும் பர பரத்தது...
ஒரு புள்ளியில்.... எதுவுமற்ற கோணமாய்.. டீம் சோர்ந்து நிற்க... விஜய்... எல்லாரையும்.... கண்கள் சிவக்கப் பார்த்தான்...
"நான்தான் அப்பவே சொன்னேனே.... தெரியாதவங்க வேண்டாம்.. ஜூனியர் ஆர்டிஸ்ட் கூப்ட்டுக்கலாம்னு..... ஹே.. நியந்தா....." என்று கத்தினான்
"யாரு.. என்ன.... ஒன்னும் புரியல..... இந்த ஊர்க்காரங்கனு சொன்னீங்க... இப்போ ஹீரோயின தூக்கிட்டு போய்ட்டானுங்க.... என்ன பண்ண...?"- அவன் கத்திக் கொண்டேயிருந்தான்...
ஒரு வழியாக முடிந்த வரை பின்னால் விரட்டி போன மூவரும்.... மூச்சு வாங்க...'காணோம் சார்.. மாயமா மறைஞ்ச மாதிரி இருக்கு.... தலை சுத்துது...என்ன பண்றதுன்னு தெரியல"- என்றபடியே திரும்பி வந்தார்கள் ......
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே...சட்டென..... நியந்தா..... "சா......ர்ர்ர்ர்..........ர்..." என்று கத்தினாள்...
உறைந்து நின்ற டீம் விழித்து நிலைத்தது......பார்வையை அவள் பக்கம் திருப்பியது...
"சார்.... இந்த பூட்டெஜ பாருங்க...." என்று சற்று முன் எடுத்த காட்சியை படபடப்போடு காட்டினாள்...
விஜய் உள்பட டீம் கவனமாகப் பார்த்தது...
அந்த இருவர்... கதை நாயகியை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்....தூரம் வரை.. அவர்கள் போய்க் கொண்டே இருக்கிறார்கள்....
இதில் என்ன என்பது போல அனைவரும் பார்க்க... நியந்தா அர்த்தத்தோடு விஜயைப் பார்த்தாள்...
"எஸ்... எஸ்.... எஸ்...... யார்ரா இவுங்க... என்ன நடக்குது... டேம்..."வார்த்தையை விழுங்கினான்.. அவன் கண்கள்.. இன்னும் திறந்தது.... மின்விசிறியின் உதவி இல்லாமலே...காற்று.....பாலைவனத்தை அலைக்கழிக்க துவங்கியிருந்தது...... கண்கள் முழுக்க நிறையும் மணல்களின் நற நறப்பில்... யோசனைகள்... குறுகுறுத்தன...ஒரு வித கதகதப்புக்குள் அவர்களின் கூடாரம்...அசைந்து கொண்டிருந்தது...
அனைவரும் மீண்டும்.. கவனம் குவித்து... பூட்டேஜைப் பார்த்தார்கள்.... கண்கள் விரியத் துவங்கின...
'ஆம்... ஆம்.... என்ன இது....? இப்படியுமா..!" என்பது போலான பாவனைகளில்... அவர்கள் முகம்.. மாறிக் கொண்டேயிருக்க.... விஜய் வாயைத் திறந்து முணங்கினான்..
"எஸ்..அவுங்க ரெண்டு பேருக்குமே நிழல் இல்ல"..
மற்றவர்கள்.....'அட.. ஆமா.. நிழல் இல்லாம எப்டி..'- என்று மீண்டும் மீண்டும்... கண்கள் தேய்த்து... மூளை இழுத்து... உணர்ந்தார்கள்...அவர்களின் உடல்.. மனது இரண்டும் வேறு வேறு திசையில் நடுங்கத் துவங்கியிருந்தது...
கதை நாயகிக்கு மட்டும்தான் அந்த மாலை வேலையின் நிழல் தட்டுத்தடுமாறி தத்தளித்து கத்தி கூச்சலிட்டு... அங்கும் இங்கும்.. அலைகிறது.. ஆனால் அவளை விரட்டி தூக்கி கொண்டு போன அந்த இருவருக்கும் நிழல்கள் இல்லை என்பதை அந்த டீமே உள்வாங்கி, பார்த்து விட்டு... ஒரு வித கலக்கத்துக்குள் தடுமாற... மெல்ல மெல்ல சூரியன் மறையும் நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது...
"நான் படிச்சிருக்கேன்.... மாயன்களுக்குதான் நிழல்கள் இருக்காதுன்னு... சோ... இவுங்க... அவுங்களா இருக்கவும் வாய்ப்பிருக்கு...."என்றான்... விஜய்.... மௌனத்துள் வெளிப்பட்ட, கலக்கத்தோடு.......
"ஆமா சார்.. நான் கூட படிச்சிருக்கேன்..இந்த உலகத்துல ஆயிரத்தில ஒருத்தர் மாயனா இருக்காலம்ன்னு.....நேத்து கூட அந்த ரெண்டு பேரும் என்னமோ கணக்கு போட்டுகிட்டே இருந்தாங்க.....அவுங்க மொழி ஒன்னும் புரியல.. ஜாடைல சொல்லிதான் காட்சியை புரிய வெச்சேன்..... ஆனா இப்டி பண்ணுவாங்கனு தெரியல.. எதுக்கு இப்டி பண்றாங்கணும்..தெரியல...... ஏன்.. கடத்திட்டு போயிருக்காங்க...... ஒன்னும் புரியல.."என்று கண்கள் கலங்க நியந்தா புலம்பிக் கொண்டிருக்க....
அவர்கள் இருந்த அந்த இடம்.. மெல்ல நகர்ந்து கொண்டிருப்பது போல அனைவருமே உணர.. மெல்ல எட்டிப் பார்த்தார்கள்... அங்கே... கட்டடங்களும்.. மலைகளும் நிரம்பிய வேறு ஓர் இடம்.......கால்வாய்களும் ஆறுகளும்.... ஓடிக் கொண்டிருக்கும்... ஒரு செழிப்பான இடம்... மெல்ல பூக்கத் துவங்கி இருப்பது போல.. காணப்பட்டது. உணரப்பட்ட உள் வாங்கலில் மெஸ்மரிசம் நடப்பது போல இருக்க...மெல்ல மெல்ல காணாமல் போய்க் கொண்டிருந்தது...அந்தப் பாலைவனம்....
"மாயன்கள் வருவார்கள்..."-என்று டைட்டில் கார்ட் போடப்பட்டது...
'ஹே......" என்று ஆடியன்ஸ் கூட்டம் கை தட்டி ஆர்ப்பரிக்க..... குறும்பட போட்டியில் இந்தப் படத்தை முதலாவதாக தேர்ந்தெடுப்பதாக கூறி... அதன் இயக்குனர்... விஷாந்த் விஜய்யை...மேடைக்கு அழைத்தார்கள் ஜட்ஜெஸ் ....
அவன்.. மெல்ல மேடை ஏற...... ஏற... அப்போதுதான் கவனித்தாள் அவனின் உதவி இயக்குனர்.. "நியந்தா.....
திடுக்கிட்ட அவள் மெல்ல பக்கத்தில் இருந்த சக உதவி இயக்குனன் கார்கியிடம்...கிசுகிசுத்தாள்...
"டேய்.....சார்க்கும்...... நிழல் இல்லடா....."
கவிஜி